சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : ஜூன் 26, 2026 10:43 PM
கலபுரகி: சிறுமியை திருமணம் செய்வதாக நம்ப வைத்து, ஹைதராபாத்துக்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கலபுரகி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கலபுரகி மாவட்டம், சேடம் தாலுகாவின், கிராமம் ஒன்றில் வசிப்பவர் நவீன்குமார் தஸ்தப்பா துத்யலா, 22. இவர் இதே கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக நாடகமாடினார். இருவரும் சேர்ந்து ஊர் சுற்றினர்.
கடந்த, 2025ம் ஆண்டு, மார்ச் 30ம் தேதியன்று, சிறுமிக்கு போன் செய்த நவீன்குமார், முக்கியமான விஷயம் பற்றி பேச வேண்டும் என, கூறி வரவழைத்தார். பாழடைந்த வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார்.
திருமணம் செய்து கொள்வதாக, சிறுமிக்கு வாக்களித்தார். ஜூலை 12ம் தேதியன்று, சிறுமியை வரவழைத்து நாம் வேறு ஊருக்கு சென்று, திருமணம் செய்து கொள்ளலாம் என, ஆசை வார்த்தைகள் பேசி, சிறுமியை நம்ப வைத்து ஹைதராபாத்துக்கு அழைத்து சென்றார்.
அங்குள்ள ஹோட்டலில் பணிக்கு சேர்ந்தார். வாடகை வீட்டில் இருவரும் தங்கினர். சிறுமியின் எதிர்ப்பை மீறி, பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதற்கிடையே, மகளை காணாமல் தேடிய பெற்றோர், சேடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் பல கோணங்களில் விசாரணை நடத்தி, சிறுமியை கண்டுபிடித்தனர்.
அவர் கூறிய தகவலின் அடிப்படையில், நவீன்குமாரை கைது செய்தனர். விசாரணையை முடித்து, கலபுரகியின் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் நவீன்குமாரின் குற்றம் உறுதியானதால், அவருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 55,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி எஸ்.எல்.சவ்ஹான், நேற்று தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் சார்பில், ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். தீர்ப்பு வெளியான ஒரு மாதத்துக்குள், அவருக்கு நிவாரண நிதி வழங்கும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.
