ADDED : ஜூன் 26, 2026 10:43 PM
மைசூரு: சரகூரு தாலுகாவின், சுற்றுப்புற கிராமங்களில் மீண்டும் புலி நடமாட்டம் இருப்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். மைசூரு மாவட்டம், சரகூரு தாலுகாவின், முள்ளூரு, ஹெக்கனுாரு, ஹஞ்சிபுரா உட்பட, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில், புலிகள் நடமாட்டம் உள்ளது.
அவ்வப்போது கிராமங்களில் நுழைந்து ஆடு, மாடு, நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடுகின்றன.
சாமஹள்ளி கிராமத்தின் கரும்பு தோட்டத்தில், நேற்று முன் தினம் இரண்டு புலிகள் நடமாட்டம் இருந்தது. இதை பார்த்த கிராமத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
கரும்பு தோட்ட உரிமையாளரான நிங்கம்மனி மகேஷ், தோட்டத்துக்கு செல்லவே அஞ்சுகிறார். இவரது தோட்டத்தில் பணியாற்ற, கூலியாட்கள் தயங்குகின்றனர்.
நிங்கம்மனி மகேஷ் நிலத்தின், அக்கம், பக்கத்து நிலங்களின் உரிமையாளர்களையும், புலிகள் அச்சுறுத்துகின்றன.
நிலத்தின் அருகில் நடமாடுவோருக்கு, புலியின் கர்ஜனை கேட்டுள்ளது. அவர்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அங்கு வந்து புலியை தேடினர்.
அவைகள் நடமாட்டம் தென்பட்ட இடங்களில், கூண்டு வைத்துள்ளனர். ஆனால், இதுவரை புலி சிக்கவில்லை.
பண்டிப்பூர் புலி சரணாலயத்துக்கு உட்பட்ட, நுகு வனப்பகுதியை ஒட்டியுள்ள முள்ளூரு கிராம பஞ்சாயத்தின், பென்னெகெரே கிராமத்தை சேர்ந்த ராஜசேகர், 65, என்பவர் புலி தாக்குதலுக்கு பலியானார்.
தற்போது இதே இடத்தில், புலி நடமாடுவதால் கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர்.வீட்டில் இருந்து வெளியே வரவும் தயங்குகின்றனர்.
