பரோலில் வந்து தலைமறைவானவர் எட்டு ஆண்டுகளுக்கு பின் கைது
பரோலில் வந்து தலைமறைவானவர் எட்டு ஆண்டுகளுக்கு பின் கைது
UPDATED : அக் 19, 2026 12:00 AM
ADDED : அக் 18, 2026 06:34 PM

பரப்பன அக்ரஹாரா: பரோலில் வெளியே வந்து தலைமறைவான கொலை வழக்கு குற்றவாளி, எட்டு ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
துமகூரின் பாவகடாவில், 2013ம் ஆண்டில் மூதாட்டியை கொலை செய்து, நகை கொள்ளையடித்த வழக்கில், ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டம், கண்ணம்பள்ளி கிராமத்தின் நரசிம்ம ரெட்டி, 56, கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
தாய்க்கு உடல்நிலை சரியில்லாததை காரணம் காண்பித்து, 2018ல் பரோலில் வந்த நரசிம்மரெட்டி, பரோல் காலம் முடிந்த பின் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவானார். போலீஸ் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில், 2024ம் ஆண்டு நரசிம்ம ரெட்டியின் புகைப்படத்தை வெளியிட்ட, பரப்பன அக்ரஹாரா போலீசார், அவரை பற்றி துப்பு கொடுப்போருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்தனர்.
ஆனாலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், கண்ணம்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சில நாட்களாக நரசிம்மரெட்டி சிகிச்சை பெறுவது பற்றி, எலக்ட்ரானிக் சிட்டி போலீசுக்கு தகவல் கிடைத்தது.
மாறுவேடத்தில் அங்கு சென்ற போலீஸ் குழு, நேற்று முன்தினம் நரசிம்மரெட்டியை கைது செய்தனர். அவர் தனது பெயரை சீனிவாசரெட்டி என்று மாற்றி கொண்டதும், மொபைல் போன், ஆதார் அட்டையை பயன்படுத்தாமல் சுற்றி திரிந்ததும் தெரிந்தது.
கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். எட்டு ஆண்டுக்கு பின், அவர் போலீசில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
