லஞ்சம், ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை: முதல்வர் சிவகுமார் எச்சரிக்கை
லஞ்சம், ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை: முதல்வர் சிவகுமார் எச்சரிக்கை
ADDED : ஜூன் 14, 2026 05:08 AM

பெங்களூரு: ''லஞ்சம் அல்லது ஊழல் கண்டறியப்பட்டால், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று முதல்வர் சிவகுமார் தலைமையில் மாவட்ட கலெக்டர், தலைமை செயல் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
பல்வேறு அரசு துறை அதிகாரிகளின் வாகனங்களை அடையாளம் காண, தனித்தனி வண்ண ஸ்டிக்கர்கள் உருவாக்க வேண்டும். உதாரணமாக, வனத்துறைக்கு பச்சை நிறமும்; சுகாதார துறைக்கு நீலம், சிவப்பு நிறம் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்.
மாவட்ட கலெக்டர் அரசு மட்டத்தில் அரசு வாகனங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பணி நேரங்களை தவிர, மற்ற நேரங்களில் அரசு வாகனங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.
அனைத்து மாவட்டம் அளவிலான அதிகாரிகளின் தொலைபேசி எண்கள், முகவரிகள், பொதுஇடங்களில் காட்சிப்படுத்த வேண்டும். மற்ற அதிகாரிகளிடம், உயர் அதிகாரிகளின் நடவடிக்கை குறித்த தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள், தலைமை செயலர்கள், மாவட்ட வன அதிகாரிகள், அனைத்து துறை தலைவர்களின் தொலைபேசிகள் 24 மணி நேரமும் இயங்க வேண்டும்.
மாநிலத்தில் பருவமழை துவங்கிவிட்டது. உரம், விதைகளின் பற்றாக்குறை குறித்து, விவசாயிகள் கவலை கொண்டுள்ளனர். உரங்களின் சேமிப்பு, வினியோகம், பகிர்வு, போக்குவரத்தை கண்காணிக்கவும், சட்ட விரோத போக்குவரத்து, சேமிப்பு, கொள்முதல் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.
உரத்தின் தேவையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கனமழை பெய்யும் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை, நிவாரண நடவடிக்கைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மாவட்ட அளவில் போலீசார் முக்கிய பணியாற்ற வேண்டும். சட்டம் - ஒழுங்கு கட்டுப்பாடு, மதவெறி, அதன் பரவல் தடுக்கப்பட வேண்டும். தாலுகாக்களில் கூடிய விரைவில் ரவுடி ஒழிப்பு படைகள் அமைக்க வேண்டும்.
கஞ்சா, போதை பொருட்களின் போக்குவரத்து, வினியோகம், விற்பனையை தடுக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பள்ளி, கல்லுாரி பகுதிகளில் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
