/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனைவிக்கு ஆபாச மெசேஜ் மாணவருக்கு நடிகர் புத்திமதி
/
மனைவிக்கு ஆபாச மெசேஜ் மாணவருக்கு நடிகர் புத்திமதி
ADDED : ஜூலை 11, 2025 10:58 PM

பெலகாவி: மனைவிக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லுாரி மாணவரை தண்டிக்காமல், அவருக்கு நடிகர் புத்திமதி கூறினார்.
பெலகாவி மாவட்டம், பைலஹொங்கலாவில் வசிப்பவர் சஞ்சு பசய்யா. நகைச்சுவை நடிகரான இவர், கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.
எச்சரிக்கை
இவரது மனைவியும், நடிகையுமான பல்லவிக்கு, சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து, ஆபாச மெசேஜ்கள் வந்தன. ஆபாச படங்களும் வந்தன.
ஆரம்பத்தில் பல்லவி பொருட்படுத்தவில்லை. ஆனால் இந்நபரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமானது. இதுகுறித்து, கணவர் சஞ்சு பசய்யாவிடம் கூறினார்.
தம்பதி பைலஹொங்கலா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆபாச மெசேஜ் அனுப்பிய நபரை கண்டுபிடிக்க முயற்சித்தனர்.
பல்லவிக்கு மெசேஜ் வந்த எண்ணை வைத்து ஆபாச மெசேஜ் அனுப்பியவரை போலீசார் கண்டுபிடித்தனர். அவர் பி.யு.சி., படிக்கும் மாணவர். அவரை நேற்று போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். அப்போது நடிகர் சஞ்சு பசய்யா, தன் மனைவியுடன் போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.
“இது போன்று செய்யக்கூடாது,” என, மாணவருக்கு பொறுமையுடன் சஞ்சு பசய்யா புத்திமதி கூறினார். “கல்லுாரி மாணவர் என்பதால், அவரது எதிர்காலத்தை மனதில் கொண்டு, தண்டிக்க வேண்டாம்,” என, போலீசாரிடம் சஞ்சு பசய்யா கேட்டுக்கொண்டார். அதன்படி மாணவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
பாராட்டு
மாணவரும் தன் தவறை உணர்ந்து, மன்னிப்பு கேட்டுக்கொண்டார். “இனி இது போன்று செய்வது இல்லை,” என, உறுதி அளித்தார்.
இதேபோன்று, நடிகை பவித்ரா கவுடா விஷத்தில் நடந்தது. ரேணுகாசாமியை எச்சரித்து விட்டிருந்தால், கொலை நடந்திருக்காது. பொறுமை இழந்த தர்ஷன், கொலை செய்யும் அளவுக்கு சென்றுவிட்டார். ஆனால் நடிகர் சஞ்சு பசய்யா, பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதை, அனைவரும் பாராட்டுகின்றனர்.