/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறையில் வசதிகள் நடிகர் மீண்டும் புலம்பல்
/
சிறையில் வசதிகள் நடிகர் மீண்டும் புலம்பல்
ADDED : செப் 18, 2025 07:51 AM

பெங்களூரு : 'நீதிமன்றம் உத்தரவிட்டும், சிறை அதிகாரிகள் எனக்கு படுக்கை, தலையணை வழங்கவில்லை' என, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், நடிகர் தர்ஷன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் உட்பட ஏழு பேர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உயர் நீதிமன்றத்தில் தர்ஷன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'எனக்கு முதுகுவலி இருப்பதால், படுக்கை, தலையணை உட்பட அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், சிறை விதிகளுக்கு உட்பட்டு, அவருக்கு தேவையான வசதி செய்து தரும்படி உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது 57வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தர்ஷன் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தர்ஷன் தரப்பு வக்கீல் சுனில் வாதிட்டதாவது:
சிறையில் உள்ள மனுதாரரை 14 நாட்கள் மட்டுமே தனிமை அறையில் வைக்க வேண்டும். ஆனால், அவர் சிறையில் அடைக்கப்பட்டு ஒரு மாதமாகிவிட்டது. இன்னமும் தனிமை அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சூரியனை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர் கேட்டபோது, சிறை அதிகாரிகள், 'வேண்டுமானால் சூரியனை உள்ளே கொண்டு வரட்டுமா?' என்று கேலி செய்கின்றனர். அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கை சரியில்லை.
அத்துடன் படுக்கை, தலையணை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், 27ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.