நடிகர் தர்ஷன் துப்பாக்கி உரிமம் ரத்து; : போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை
நடிகர் தர்ஷன் துப்பாக்கி உரிமம் ரத்து; : போலீஸ் உத்தரவுக்கு இடைக்கால தடை
ADDED : பிப் 24, 2026 06:40 AM

பெங்களூரு: நடிகர் தர்ஷன் வைத்திருந்த துப்பாக்கி உரிமத்தை போலீசார் ரத்து செய்ததற்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது.
சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் 2024 ல் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். அதே ஆண்டு டிசம்பரில் ஜாமினில் வெளியே வந்தார்.
இவரின் விடுதலையால் சாட்சிகளை மிரட்டவும், ஆதாரங்களை அழிக்கவும் தன்னிடம் உள்ள துப்பாக்கியை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில், 2025 ஜன., 20ல், அவரின் ஆயுத உரிமத்தை, துணை போலீஸ் கமிஷனர் ரத்து செய்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தர்ஷன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நடந்த விவாதம்:
தர்ஷன் தரப்பு வக்கீல் சுனில் குமார்: மனுதாரர் 2008 ல் துப்பாக்கி வைத்து கொள்வதற்கான உரிமம் பெற்றுள்ளார். இதுவரை துப்பாக்கியை காட்டி யாரையும் மிரட்டியதில்லை. ஆனாலும், அவரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது .
நீதிபதி நாகபிரசன்னா: அவர் வைத்துள்ள துப்பாக்கிக்கு உரிமம் பெறவில்லை என்றால், இப்போதே உங்கள் மனு தள்ளுபடி செய்யப்படும். அவர் உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்திருக்கிறாரா.
அவர் ஜாமினில் வெளியே இருக்கும்போது, ஏதாவது செய்யக்கூடும் என்று நீங்கள் கவலைப்படவில்லையா. ஆனால், அவரது ஜாமின் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு உள்ளது.
வக்கீல்: மனுதாரர் தனது துப்பாக்கியை போலீசில் ஒப்படைத்து விட்டார்.
வாதங்களை கேட்ட நீதிபதி, 'துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்த போலீசார் உத்தரவுக்கு, இடைக்கால தடை விதித்து, மார்ச் 6ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
