நடிகர் தர்ஷன் வழக்கில் 29ல் 'அப்ரூவர்' வாக்குமூலம்
நடிகர் தர்ஷன் வழக்கில் 29ல் 'அப்ரூவர்' வாக்குமூலம்
ADDED : செப் 25, 2026 03:57 AM

பெங்களூரு: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், பிரதோஷ் ராவை அப்ரூவராக ஏற்க கூடாது என்ற விஜயலட்சுமியின் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, செப்.,28ல் பிரதோசிடம் வாக்குமூலம் பதிவு செய்ய, 59வது கூடுதல் நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், 14வது குற்றவாளியான பிரதோஷ்ராவ், அப்ரூவராக மாற ஒப்புக் கொண்டார். இதை, 59வது கூடுதல் நகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.
இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், நடிகர் தர்ஷன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதுபோல, அவரது மனைவி விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவையும், கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, 59வது கூடுதல் நகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணை துவங்கியது.
அப்போது தர்ஷன் தரப்பு வக்கீல், 'சம்மன் அனுப்பபக்கூடாது. நாங்கள் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போகிறோம்' என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், 'செப்., 28ம் தேதி பிரதோஷ்ராவிடம் வாக்குமூலம் வாங்க வேண்டும்.
இருப்பினும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அவர் மேல் முறையீடு செய்யவிருப்பதால், விசாரணையை ஒத்திவைக்க முடியாது. செப்., 28ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என்றது.
செப்., 28ம் தேதியன்று, பிரதோஷ்ராவ் நீதிமன்றத்தில் ஆஜராகி, வாக்குமூலம் அளிக்க உள்ளார்.
இதற்கிடையில், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய நடிகர் தர்ஷன் தரப்பில் தயாராகி வருகின்றனர்.
