ADDED : செப் 25, 2026 03:58 AM

பெங்களூரு: பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, நாயக் சமுதாய மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் தன் சக்தியை வெளிப்படுத்துவது, அவரது எண்ணமாகும்.
காங்கிரஸ் அரசில் செல்வாக்கு மிக்க அமைச்சர்களில், சதீஷ் ஜார்கிஹோளியும் ஒருவர். இவர், வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களில், சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், இம்மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில், சதீஷ் ஜார்கிஹோளியின் வீடு, அலுவலகம் மற்றும், அவரது மகளும், காங்கிரஸ் எம்.பி.,யுமான பிரியங்கா, மகன் ராகுல், மைத்துனர் மஞ்சுநாத்துக்கு சொந்தமான இடங்களிலும், அமலாக்கத்துறை சோதனை நடந்தது.
சோதனையில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டது. அமலாக்கத்துறை சோதனையால், சதீஷ் ஜார்கிஜோளி தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளார். இவரது இமேஜ் பாதிப்பதாக கூறப்படுகிறது.
இழந்த செல்வாக்கை மீண்டும் பெறும் நோக்கில், வரும் நவம்பரில் நாயக் சமுதாய மாநாடு நடத்த, சதீஷ் ஜார்கிஹோளி திட்டமிட்டுள்ளார்.
இதற்கான முன்னேற்பாடு தொடர்பாக, தன் அலுவலகத்தில் அமைச்சர்கள் உட்பட, சம்பந்தப்பட்டவர்களுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், வால்மீகி சமுதாய மடாதிபதிகளும் பங்கேற்றனர். இம்மாநாட்டின் மூலம், தன் சக்தியை காட்ட சதீஷ் ஜார்கிஹோளி எண்ணுவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
