/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டில் நடிகர் மனு
/
வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டில் நடிகர் மனு
ADDED : ஜூலை 10, 2025 11:06 PM

பெங்களூரு: உடன் நடித்த நடிகையை பலாத்காரம் செய்ததாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடிகர் மதேனுார் மனு, மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தன்னுடன் நடித்த 33 வயது நடிகையை பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் மதேனுார் மனு, மே 22ல் கைது செய்யப்பட்டார். நகரின் ஆறாவது ஏ.சி.ஜே.எம்., நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையில் கன்னட மூத்த நடிகர்கள் சிவராஜ் குமார், தர்ஷன், துர்வா சர்ஜாவை ஆட்சேபனைக்கு உரிய வகையில் பேசியதாக ஆடியோ வெளியானது. இதையடுத்து, கன்னட திரையுலகம், அவருக்கு தடை விதித்தது.
இந்நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மதேனுார் மனு, மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு, நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பு வக்கீல் முன்வைத்த வாதம்:
மனுதாரரும், அவருக்கு எதிராக புகார் அளித்தவரும், 'காமெடி கில்லாடிகள்' நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இருவரும் ஒரே வாடகை வீட்டில் வசித்து வந்தனர். 2022ல் நடந்ததாக கூறப்படும் சம்பவத்துக்கு, 2025ல் புகார் அளித்துள்ளார்.
மனுதாரர் மனு நடித்த திரைப்படம் வெளியாகும் நேரத்தில், அவருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், இப்புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
இம்மனு மீதான தீர்ப்பு வரும் வகையில், விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் வக்கீல் வாதிடுகையில், ''நடிகர் மனு மீதான வழக்கை ரத்து செய்யவோ, விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணைக்கு தடைவிதிக்கவோ கூடாது,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ண குமார், நீதிமன்ற விசாரணையை ஒத்திவைத்தார்.