/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடிகை ரன்யாவிடம் சிறையில் ஐ.டி., அதிகாரிகள் விசாரணை
/
நடிகை ரன்யாவிடம் சிறையில் ஐ.டி., அதிகாரிகள் விசாரணை
நடிகை ரன்யாவிடம் சிறையில் ஐ.டி., அதிகாரிகள் விசாரணை
நடிகை ரன்யாவிடம் சிறையில் ஐ.டி., அதிகாரிகள் விசாரணை
ADDED : ஜூன் 11, 2025 11:41 PM

பெங்களூரு: தங்கம் கடத்திய வழக்கில், பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவிடம், வருமான வரி அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் 12 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம் கடத்திய வழக்கில், நடிகை ரன்யா ராவ், 33 கடந்த மார்ச் 3ம் தேதி கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த மே 20ம் தேதி, அவருக்கு ஜாமின் கிடைத்தது. ஆனால், அவர் மீது காபிபோசா எனும் அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ், வருவாய் புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்து இருப்பதால், ஜாமின் கிடைத்தும் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் உள்ளார்.
இதற்கிடையில், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டார் என்ற தகவலின் அடிப்படையில், ரன்யா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். ரன்யாவின் வங்கிக் கணக்கில் இருந்து பல வங்கிக் கணக்கிற்கு, பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது பற்றி, வருமான வரி துறைக்கும் தகவல் கிடைத்தது.
இதனால் ரன்யாவிடம் விசாரிக்க அனுமதி கேட்டு, பெங்களூரு பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில், வருமான வரி துறை சார்பில் மனு செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி விஸ்வநாத் கவுடர், ரன்யாவிடம் ஜூன் 11ம் தேதி முதல் 3 நாட்கள் விசாரிக்க அனுமதி அளித்தார்.
இந்நிலையில் நேற்று காலை 10:00 மணிக்கு சிறைக்கு சென்ற, வருமான வரி அதிகாரிகள், சிறையில் உள்ள ஹாலில் வைத்து ரன்யாவிடம் விசாரணை நடத்தினர்.
'எத்தனை முறை தங்கம் கடத்தி வந்தீர்கள், இதில் யாருக்கு தொடர்பு உள்ளது, கடத்தி வந்த தங்கத்தை யாரிடம் கொடுத்தீர்கள்' என்பது உட்பட பல கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
நேற்று மாலை 5:00 மணி வரை விசாரணை நடந்தது. இன்றும், நாளையும் விசாரணை நடக்க உள்ளது. தங்கம் கடத்தலில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு இருப்பதாக, எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.
விசாரணையின் போது ஆளுங்கட்சியினர் யார் பெயரையாவது ரன்யா கூறினால் சிக்கல் தான்.
ரன்யாவுடன் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில், கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.