ADDED : ஏப் 14, 2026 05:58 AM

பெங்களூரு: ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பயணித்த நடிகை ரச்சிதா ராம் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
கன்னட திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவர் ரச்சிதா ராம். இவர், தமிழின் கூலி படத்தின் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் பிரபலமானார்.
இவர், தன் தோழியுடன் புல்லட் பைக்கில் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. வீடியோவில், பைக்கை ஓட்டிச்செல்லும் பெண்ணும், பின்னால் அமர்ந்து கொண்டிருக்கும் ரச்சிதாவும் ஹெல்மெட் அணியவில்லை.
இதை குறிப்பிட்டு பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். போக்குவரத்து விதிகளை மீறிய நடிகை ரச்சிதா மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
'சாமானிய மக்கள் மட்டும் தான் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டுமா;பணக்காரர்கள், திரைப்பிரபலங்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்ற மாட்டார்களா' என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
