ரூ.50 கட்டணத்திற்கு பதில் ரூ.2,400 வசூலித்த அடாவடி ஆட்டோ ஓட்டுநர்
ரூ.50 கட்டணத்திற்கு பதில் ரூ.2,400 வசூலித்த அடாவடி ஆட்டோ ஓட்டுநர்
ADDED : ஜூன் 24, 2026 10:41 PM
பெங்களூரு: பெங்களூருக்கு புதிதாக வந்த இரண்டு இளைஞர்களை, பஸ் நிலையத்தில் இறக்கி விட, 2,400 ரூபாய் வசூலித்த ஆட்டோ ஓட்டுநரை, பலரும் கண்டித்துள்ளனர்.
இது குறித்து, பெங்களூரில் வசிக்கும் மென் பொறியாளர் சோனு என்பவர் கூறியதாவது:
எனக்கு அறிமுகமுள்ள 16 மற்றும் 18 வயது இளைஞர்கள், கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் சில நாட்களுக்கு முன், விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் ரயில் நிலையத்தில் வந்திறங்கினார். இவர்கள் ஓசூருக்கு செல்ல வேண்டியிருந்தது. எனவே, பஸ் பிடிப்பதற்காக, ஓசூர் அத்திப்பள்ளி பஸ் நிலையத்துக்கு செல்ல, ஆட்டோ பிடித்தனர்.
ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அந்த பஸ் நிலையத்தில் விட சம்மதித்து, இரண்டு இளைஞர்களிடம் தலா, 50 ரூபாய் கட்டணம் கேட்டார். அவர்களும் தருவதாக கூறினர். ஆனால் அங்கு சென்றடைந்த பின், 3,000 ரூபாய் கட்டணம் கேட்டார்.
அப்போது இளைஞர்கள், எனக்கு போன் செய்தனர். இளைஞர் என்னுடன் பேசும் போதே, அவரது கையில் இருந்த மொபைல் போனை, அந்த ஆட்டோ டிரைவர் பறித்து கொண்டார். இளைஞர் மன்றாடி, மொபைல் போனை திரும்ப பெற்றுக்கொண்டார்.
அதன் பின், ஆட்டோ ஓட்டுநருக்கு, 2,400 ரூபாய் கொடுத்து விட்டு சென்றனர். இந்த தகவலை பெங்களூரு போலீசாருக்கு தெரிவித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இளைஞர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததை, பலரும் கண்டித்துள்ளனர்.
இவரை போன்ற ஆட்டோ ஓட்டுநர்களால் தான் பெங்களூருக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என, கண்டித்தனர்.
