/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாநகராட்சி நீச்சல் குளங்களில் கூடுதல் வசூல்
/
மாநகராட்சி நீச்சல் குளங்களில் கூடுதல் வசூல்
ADDED : ஏப் 29, 2025 06:10 AM

பெங்களூரு: பெங்களூரின் பல்வேறு இடங்களில் மாநகராட்சி சார்ந்த நீச்சல் குளங்கள் உள்ளன. பொது மக்கள் இங்கு கட்டணம் செலுத்தி நீச்சல் பயிற்சி பெறுகின்றனர். நீச்சலடித்து பொழுது போக்கவும் பலர் வருகின்றனர்.
இதற்கு முன்பு 10 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கட்டணம் இருக்கவில்லை. இலவசமாக பயிற்சி பெறலாம். பெரியவர்களுக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. கோடை என்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை உள்ளது.
வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால், சிறார்கள் நீச்சல் குளத்துக்கு வந்து, சிறிது நேரம் நீச்சலடித்து விளையாடி உடல் வெப்பத்தை தணிக்கின்றனர்.
நீச்சல் குளத்துக்கு வரும் சிறுவர், சிறுமியர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நீச்சல் குள பராமரிப்பு ஊழியர்கள், சிறார்களிடம் 35 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்.
பெரியவர்களிடமும் நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக, புகார் வெளியாகியுள்ளது.
நீச்சல் குளங்களில் 40 நிமிடங்கள் நீச்சலடிக்க, 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதை விட இரண்டு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 10 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு, இலவசமாக வாய்ப்பளிக்காமல் கட்டணம் வசூலிப்பதால், பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மஹாலட்சுமி லே - அவுட், விஜயநகர் உட்பட, 13 இடங்களில் மாநகராட்சி சார்ந்த நீச்சல் குளங்கள் உள்ளன. இவற்றில் கூடுதல் கட்டணம் நிர்ணயித்து, போர்டு வைக்கப்பட்டுள்ளது.
நீச்சல் குளம் நிர்வகிப்பு ஊழியர்கள், அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து, அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.