கர்நாடக சிறைகள் சீரமைப்பு குறித்து ஏ.டி.ஜி.பி., குழு சமர்ப்பிப்பு 30 பரிந்துரைகள்! பயங்கரவாதிகளின் மொபைல் போன் பயன்பாட்டை தடுக்க யோசனை
கர்நாடக சிறைகள் சீரமைப்பு குறித்து ஏ.டி.ஜி.பி., குழு சமர்ப்பிப்பு 30 பரிந்துரைகள்! பயங்கரவாதிகளின் மொபைல் போன் பயன்பாட்டை தடுக்க யோசனை
ADDED : ஜன 17, 2026 05:48 AM

பெங்களூரு: கர்நாடக மாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகள், மொபைல் போன் பயன்படுத்தும் வீடியோ வெளியாகி சர்ச்சையானதை அடுத்து, சிறைகளை சீரமைப்பது தொடர்பாக, 30 பரிந்துரைகளை, அரசிடம் ஏ.டி.ஜி.பி., தலைமையிலான குழு சமர்ப்பித்து உள்ளது. சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் உட்பட, 17 பேர் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறை வளாகத்தில் நாற்காலியில் அமர்ந்தபடி, ரவுடி ஒருவருடன் தர்ஷன் சிகரெட் பிடித்தபடி டீ குடிக்கும் புகைப்படம் வைரலானது.
தலைவலி இதையடுத்து இக்கொலை வழக்கில் அடைக்கப்பட்ட அனைவரும், மாநிலத்தின் பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். அதன்பின், வழக்கு விசாரணையின் போது, மீண்டும் அனைவரும் அதே சிறைக்கு மாற்றப்பட்டனர்.
அதேபோல, கடந்தாண்டு நவம்பரில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதி ஷகீல், மற்றொரு குற்றவாளி உமேஷ் ரெட்டி ஆகியோர் மொபைல் போனில் பேசுவது மற்றும், 'டிவி' பார்ப்பது தொடர்பான வீடியோ வெளியானது.
இதுமாநில காங்கிரஸ் அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. சிறைகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், முறைகேட்டை தடுக்கவும் அரசு உத்தரவிட்டது.
குழு அமைப்பு
இதையடுத்து, முறைகேடுகள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கவும், அதற்கான பரிந்துரைகள் வழங்கவும் கமிட்டி அமைக்கும்படி, சிறைத்துறை டி.ஜி.பி., அலோக்குமாருக்கு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உத்தரவிட்டார். அந்த உத்தரவுப்படி, சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஹிதேந்திரா தலைமையில், ஐ.ஜி.பி., சந்தீப் பாட்டீல், எஸ்.பி.,க்கள் ரிஷ்யந்த், அமர்நாத் ரெட்டி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர், டில்லியில் உள்ள திஹார் சிறைச்சாலை, தெலுங்கானாவில் உள்ள சன்சல்குடா சிறை உட்பட பல மாநிலங்களின் சிறைகளுக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
இரண்டு மாத ஆய்வுக்கு பின், உள்துறை அமைச்சர் பரமேஸ்வரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், 4,834 கைதிகள் உள்ளனர். இவர்களை கண்காணிக்க, 571 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். சிறை விதிமுறைகளின்படி, ஆறு கைதிகளுக்கு ஒரு சிறை ஊழியர் இருக்க வேண்டும். எனவே, ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள சிறைகளில், 40 முதல் 47 சதவீத அளவுக்கு ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. அதை சரி செய்ய வேண்டும்
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது ஒரே சிறையில் பணியாற்றியிருக்க வேண்டும். நவீன யுகத்துக்கு ஏற்றவாறு, அனைத்து அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் தொடர்பாக ஆண்டுதோறும் பயிற்சி அளிக்க வேண்டும்
கேமராக்கள் சிறையின் மதில் சுவர்கள் குறைந்தபட்சம், 30 அடி உயரம் இருக்க வேண்டும். அதனை சுற்றிலும் வலை அமைத்திருக்க வேண்டும். வெளியில் இருந்து கஞ்சா உட்பட போதை பொருட்களை சிறைக்குள் வீசுவதை தடுக்க, சுவர் பகுதிகளை சுற்றி கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். சிறையை சுற்றி, வெளிப்பகுதியில் பொது மக்கள் நடக்க தடை விதிக்க வேண்டும்
டில்லி திஹார் சிறையில், 16,000 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை கண்காணிக்க, 8,600 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. மேலும், திஹார் சிறையில் இருப்பது போல, ஒவ்வொரு பிளாக்கிற்குள்ளும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
இந்த கேமராக்களை, 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். ஆனால், பரப்பன அக்ரஹாராவில் ஐந்தாயிரம் கைதிகளை கண்காணிக்க, 332 கேமராக்கள் மட்டுமே உள்ளன. வைபை சிக்னலை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சிறை அறைகள், கழிவறைகளை, மெட்டல் டிடெக்டர் மூலம் ஆய்வு செய்ய வேண்டும்
கைதிகள் அடிக்கடி தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளும் வகையில் வசதி செய்து கொடுத்தால், சட்ட விரோதமாக மொபைல் போன் கடத்துவது தவிர்க்கப்படும். கைதிகளுக்கு, 'கைரேகை' பதிவை கட்டாயமாக்க வேண்டும்.
கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள சிறை அறைக்கு வெளியே மின்சார இணைப்பு இருக்க வேண்டும். அனைத்து பிளாக்குகளிலும், 'எப்.எம்., ரேடியோ ஸ்பீக்கர்' பொருத்த வேண்டும். குறிப்பாக, பயங்கரவாதிகள் மொபைல்போன் பயன்படுத்துவதை கண்டிப்பாக தடுக்க வேண்டும்
ஆணைய கூட்டம் கைதிகளின் நலனுக்காக அமைக்கப்பட்ட கைதிகள் மேம்பாட்டு ஆணையம் முறையாக செயல்பட வேண்டும். கைதிகளுக்குள் இருக்கும் பிரச்னையை தீர்க்க, அடிக்கடி ஆணைய கூட்டம் நடத்த வேண்டும். அதேவேளையில், கைதிகள், தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்க வேண்டும். பேக்கரிகள் உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்க அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்
தண்டனை கைதிகள், பயங்கர குற்றவாளிகள், முதன் முறை குற்றவாளிகள், இளம் குற்றவாளிகள், பெண் கைதிகள், ஏமாற்றுதல், வரதட்சணை, தாக்குதல் போன்ற சிறிய வழக்கு கைதிகளை தனித்தனியாக வகைப்படுத்தப்பட வேண்டும்.
இது, கைதிகளை சீர்திருத்துவதற்கு வழிவகுக்கும். அவர்கள் கொடூர குற்றவாளிகளுடன் அடைக்கப்பட்டால், முதல் முறை கைதிகள், அவர்களை போன்றே குற்றவாளிகளாக மாற வாய்ப்பு உள்ளது
வெளியில் இருந்து உணவு, பழங்கள் கொண்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். கைதிகளுக்கு சிறைக்குள்ளேயே பழங்கள், நொறுக்கு தீனிகள் வழங்க வேண்டும். கைதிகளின் வீடுகளில் இருந்து அளிக்கப்படும் ஆடைகளை, நன்றாக பரிசோதித்த பிறகே வழங்க வேண்டும். அதுபோன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் ஆடைகளையும் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
இவை உட்பட, 30 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
