அதிகாரி சந்திரசேகர் வழக்கு விவகாரம்: மத்தியஸ்தர் நியமிக்க குமாரசாமி ஒப்புதல்
அதிகாரி சந்திரசேகர் வழக்கு விவகாரம்: மத்தியஸ்தர் நியமிக்க குமாரசாமி ஒப்புதல்
ADDED : மார் 27, 2026 05:34 AM

பெங்களூரு: லோக் ஆயுக்தா சிறப்பு விசாரணை அதிகாரி சந்திரசேகருடனான வழக்கில், மத்தியஸ்தர் நியமிக்க, மத்திய அமைச்சர் குமாரசாமி ஒப்புதல் அளிப்பதாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
'சாய் மினரல்ஸ் நிறுவனத்துக்கு சுரங்க அனுமதி அளித்தது தொடர்பாக, மத்திய அமைச்சர் குமாரசாமியிடம் விசாரணை நடத்த அனுமதி அளிக்கும்படி' கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு, அப்போதைய லோக் ஆயுக்தா எஸ்.ஐ.டி., - ஏ.டி.ஜி.பி., சந்திரசேகர் கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு, குமாரசாமி, நிகில், ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சுரேஷ் ஆகியோர், சந்திரசேகருக்கு எதிராக பேசியிருந்தனர்.
இது தொடர்பாக சஞ்சய் நகர் போலீசில், தனக்கு குமாரசாமி மிரட்டல் விடுத்ததாக சந்திரசேகர் புகார் அளித்தார். இதையடுத்து மூவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரும் மத்தியஸ்தர் வைத்து, விவகாரத்தை முடித்து கொள்ள, நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்து, விசாரணையை நேற்று ஒத்தி வைத்தது.
நேற்று இம்மனு நீதிபதி சுனில் தத் யாதவ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த விவாதம்:
குமாரசாமி தரப்பு வக்கீல் ஹஸ்மத் பாஷா: இவ்வழக்கில் மத்தியஸ்தர் நியமிக்க குமாரசாமி ஒப்புதல் அளித்து உள்ளார். அதேவேளையில், இந்த மத்தியஸ்தத்தின் போது, நேரில் ஆஜராக அவர் விரும்பவில்லை. மத்தியஸ்தர், இரு தரப்பினரின் கருத்தையும் கேட்கலாம்.
சந்திரசேகர் தரப்பு வக்கீல்: குமாரசாமி செல்வாக்கு மிக்கவர். சந்திரசேகரோ வெறும் அதிகாரி மட்டுமே. எனவே நீதிமன்றம் எங்களின் கருத்தை பரிசீலிக்க வேண்டும்.
நீதிபதி: மத்தியஸ்தர் யாராக இருக்க வேண்டும் என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும். இரு தரப்பினருக்கும் ஏற்புடைய ஒரு மத்தியஸ்தர் நியமிக்கப்படுவார். அதிகாரி சந்திரசேகரின் கவலைகள் குறித்து நான் நன்கு அறிவேன்.
(அப்போது மெல்லிய குரலில் நீதிபதி) வக்கீலிடம் செல்வதைவிட, ஒரு மத்தியஸ்தரிடம் செல்வதே சிறந்தது. மத்தியஸ்தர் மூலம் சமரச முயற்சி தோல்வியடைந்தால், நீதிமன்றம் என்ற வழி உள்ளது.
புகார்தாரர் சந்திரசேகர் வக்கீல் விடுத்த கோரிக்கையின்படி, மாநில கூடுதல் அரசு வக்கீல் ஜெகதீஷ், சந்திரசேகருடன் ஆலோசிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஏப்., 2ம் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
