துரைமுருகன் மீது புகார் அளித்த நிர்வாகி சஸ்பெண்ட்
துரைமுருகன் மீது புகார் அளித்த நிர்வாகி சஸ்பெண்ட்
ADDED : செப் 05, 2026 03:36 AM
காட்பாடி: தி.மு.க., பொதுச்செயலரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் மீது, வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில் மோசடி புகார் அளித்த, தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் சிவகுமார், அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் தொகுதி காங்குப்பத்தை சேர்ந்த சிவகுமார், வேலுார் வடக்கு மாவட்ட தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்.
இவர், கடந்த ஜூலை மாதம், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதியிடம் புகார் ஒன்று அளித்தார்.
அதில், 'எனக்கு ஒப்பந்த பணிகள் தருவதாக கூறி, 1.50 கோடி ரூபாயை தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் வாங்கினார். மேலும், என் மனைவிக்கு ஒன்றிய தலைவர் பதவி தருவதாக கூறி, தனியாக 75 லட்சம் ரூபாய் வாங்கினார்.
'ஆனால், ஒப்பந்த பணியும் தரவில்லை; ஒன்றிய தலைவர் பதவியும் தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டால், காரணம் கூறி தட்டிக்கழிக்கிறார். எனவே, எனக்கு உரிய நியாயம் கிடைக்க உதவி செய்ய வேண்டும்,' என கூறி இருந்தார்.
உதயநிதியிடம் அளித்த புகாரின் மீது, தி.மு.க., தலைமை உரிய நடவடிக்கை எடுக்காததால், வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில், துரைமுருகன் மீது கடந்த 2ம் தேதி சிவகுமார், புகார் அளித்தார். இந்த நிலையில், தி.மு.க.,வில் இருந்து சிவகுமார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து, சிவ குமார் கூ றுகையில், ''துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி., ஆகியோர் என்னிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றி விட்டனர். தற்போது, லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்,” என்றார்.
