ADDED : ஏப் 21, 2026 02:43 AM

விஜயபுரா: ''அடுத்த மாதம் நல்ல முகூர்த்தம் பார்த்து, புதிய அரசியல் கட்சி துவக்குவது குறித்து, முடிவு செய்வேன்,'' என, விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தெரிவித்தார்.
பா.ஜ.,வின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் பசனகவுடா பாட்டீல் எத்னால். இவருக்கு விஜயேந்திராவைமாநில பா.ஜ., தலைவராக்கியதில், உடன்பாடு இல்லை.
தனக்கு மாநில தலைவர் பதவி கிடைக்கும் என, எதிர்பார்த்து ஏமாந்தார். இந்த ஏமாற்றம் வார்த்தைகளாக வெளி வந்தது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரது மகன்களை பகிரங்கமாக விமர்சித்தார்.
காங்கிரஸ் அரசை கவிழ்த்து, தான் முதல்வராக பா.ஜ.,வில் ஒருவர், 1,000 கோடி ரூபாயை தயார் செய்து வைத்திருக்கிறார் என, சட்டசபையில் பேசி, கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார்.
மேலிடம் எச்சரித்தும் பொருட்படுத்தவில்லை. இதனால் அவர் பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்டார். இவரை மீண்டும் பா.ஜ.,வுக்கு அழைத்து செல்ல, முயற்சி நடக்கிறது.
இதற்கிடையே அவர் தனிக்கட்சி துவங்க ஆலோசிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வரும் மாதம் நல்ல முகூர்த்த நாள் பார்த்து, புதிய அரசியல் கட்சி துவக்குவது குறித்து ஆலோசித்து, முடிவு செய்வேன். மாவட்ட வாரியாக ஹிந்துத்வா கூட்டம் நடத்துவோம், கோலார் மாவட்டத்தின், வரலாற்று பிரசித்தி பெற்ற, விக்னேஸ்வரா கோவிலில் இருந்து, கூட்டத்தை துவங்குவோம்.
ஹிந்துத்வா, வேலையில்லா திண்டாட்டம், மேம்பாடு என, மூன்று விஷயங்கள் தொடர்பாக, ஆலோசனை நடத்துவோம். புதிய கட்சி துவக்குவது குறித்து, மக்களிடம் கருத்து கேட்டறிவேன். அனைவரின் கருத்துகளை கேட்டு, முடிவு செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
