ஜி.பி.ஏ., தேர்தல் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் 'அபிடவிட்'
ஜி.பி.ஏ., தேர்தல் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் 'அபிடவிட்'
ADDED : ஏப் 17, 2026 05:02 AM
பெங்களூரு: ஜி.பி.ஏ., என்ற கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் தேர்தல் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக மாநில அரசு, 'அபிடவிட்' என்ற பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக, தேர்தல் நடக்காத ஜி.பி.ஏ., கட்டுப்பாட்டில் உள்ள ஐந்து மாநகராட்சிகளுக்கும், ஜூன் இறுதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என, உச்சநீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
தற்போது, மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதால், இப்பணிக்கு ஜி.பி.ஏ., உட்பட, பல்வேறு துறைகளின் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே தேர்தல் நடத்த ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்படக்கூடும். அதனால், ஜி.பி.ஏ., தேர்தலை தள்ளி வைக்கும்படி, தலைமை கமிஷனர் மஹேஸ்வர் ராவ், நகர வளர்ச்சி துறைக்கு கடிதம் எழுத முடிவு செய்திருந்தார்.
இருப்பினும், இனியும் தேர்தலை தள்ளி வைக்க முயற்சித்தால், நீதிமன்றத்தின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், வளர்ச்சி பணிகளுக்கு பின்னடைவு ஏற்படுகிறது. மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியவில்லை என, நகர வல்லுநர்களும் அறிவுறுத்துகின்றனர். இதை மனதில் கொண்டு, உச்சநீதிமன்ற உத்தரவுபடியே, தேர்தலை நடத்த கர்நாடக அரசு தயாராகிறது.
வார்டுகள் மறு சீராய்வு மற்றும் இடஒதுக்கீடு செயல்பாடு முடிந்துள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் நேற்று முன்தினம், மாநில அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
