/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.3 கோடி போதை பறிமுதல் ஆப்ரிக்க வாலிபர் கைது
/
ரூ.3 கோடி போதை பறிமுதல் ஆப்ரிக்க வாலிபர் கைது
ADDED : மே 28, 2025 11:01 PM
அம்ருதஹள்ளி: பெங்களூரு தாசரஹள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு பின்பக்கம் உள்ள மைதானத்தில், வாலிபர் ஒருவர் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக, அம்ருதஹள்ளி போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.
அங்கு போலீசார் சென்றனர். அவர்களை பார்த்ததும் வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் தப்ப முயன்றார். அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். ஸ்கூட்டர் டிக்கியை திறந்து பார்த்த போது அதில் ஒரு இரண்டு பைகள் இருந்தது. பைகளுக்குள் எம்.டி.எம்.ஏ., கிரிஸ்டல் போதை பொருள் இருந்தது. எடை பார்த்த போது 3 கிலோ இருந்தது. சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு 3 கோடி ரூபாய் ஆகும்.
விசாரணையில், கைதானவர் மேற்கு ஆப்ரிக்காவின் செனகல் நாட்டின் ஆன்ட்ரு பெப்பே, 30, என்பது தெரிந்தது. கடந்த 2023ம் ஆண்டு செனகல்லில் இருந்து வேலைக்காக, பெங்களூருக்கு ஆன்ட்ரு பெப்பே வந்திருந்தார்.
தாசரஹள்ளியில் தங்கி இருந்து துணி வியாபாரம் செய்தார். கடந்த ஆண்டே அவரது விசா காலம் முடிந்தது. ஆனால், அவர் திரும்பி செல்லவில்லை.
சட்டவிரோதமாக இங்கு தங்கியதுடன், பானஸ்வாடியில் வசிக்கும் நைஜீரிய வாலிபர் ஒருவரிடம் இருந்து போதை பொருள் வாங்கி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்று வந்ததும், எளிதில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையில் இப்படி செய்ததும் தெரிந்தது.
ஆன்ட்ரு பெப்பே மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், அம்ருதஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.