விமான நிலையங்கள் பெயர் மாற்றம் ஹூப்பள்ளியில் நாளை ஆலோசனை
விமான நிலையங்கள் பெயர் மாற்றம் ஹூப்பள்ளியில் நாளை ஆலோசனை
ADDED : ஏப் 30, 2026 11:45 PM
ஹூப்பள்ளி: மாநிலத்தில் உள்ள ஐந்து முக்கிய விமான நிலையங்களுக்கு புகழ்பெற்ற மாநில ஆளுமைகளின் பெயர்களைச் சூட்டுவதற்கான கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக, நாளை ஹூப்பள்ளியில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஹூப்பள்ளி மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் சிவானந்த் முத்தனாவர் கூறியதாவது:
விஜயபுரா விமான நிலையத்திற்கு ஜகஜோதி பசவேஸ்வரா விமான நிலையம், ஹூப்பள்ளி விமான நிலையத்திற்கு கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா, பெலகாவி விமான நிலையத்திற்கு கிட்டூர் ராணி சென்னம்மா, ஷிவமொக்கா விமான நிலையத்திற்கு ராஷ்டிரகவி டாக்டர் கே.வி.புட்டப்பா (குவெம்பு) ஆகிய புகழ்பெற்ற மாநில ஆளுமைகளின் பெயர்களைச் சூட்டும்படி மத்திய அரசுக்கு மாநில அரசு முறைப்படி பரிந்துரை செய்துள்ளது.
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கு டாக்டர் ராஜ்குமார் பெயர் சூட்டப்பட வேண்டும்.
விமான நிலையங்களின் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக மத்திய அமைச்சரவையில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாததால், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, ஹூப்பள்ளியில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய கன்னட ஆர்வலர்கள், மடாதிபதிகள் பங்கேற்பர். போராட்டத்தின் அடுத்த தேதி அப்போது அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
