ADDED : மே 19, 2026 11:32 PM

பெங்களூரு: முன்னாள் எம்.எல்.ஏ., அகண்ட சீனிவாச மூர்த்தி, ம.ஜ.த.,வில் மீண்டும் இணைய உள்ளார்.
பெங்களூரு புலிகேசிநகர் தொகுதி, பா.ஜ., பிரமுகர் அகண்ட சீனிவாச மூர்த்தி. இவர், கடந்த, 2013 - 2018 வரை புலிகேசிநகர் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.
பின், அக்கட்சி தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், காங்கிரசில் இணைந்து, 2018 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த, 2020ல் நடந்த, கே.ஜி.ஹள்ளி கலவரத்தின் போது, அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீடு தீக்கிரையானது. அவருக்கு கட்சியினரிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை. விரக்தி அடைந்த அவர், 2023 தேர்தலுக்கு முன், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த, 2023 சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின், 2024ல் மத்திய தொழிலாளர் நல இணை அமைச்சர் ஷோபா முன், பா.ஜ.,வில் ஐக்கியம் ஆனார்.
அக்கட்சியில் அவருக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் தாய் கட்சியான ம.ஜ.த.,வுக்கு செல்ல முடிவு எடுத்தார். அக்கட்சியின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்களுடன் பேச்சு நடத்தினார்.
இந்நிலையில், காவல் பைரசந்திராவில் உள்ள அகண்ட சீனிவாச மூர்த்தி வீட்டிற்கு, ம.ஜ.த., மாநில தலைவரும், மத்திய கனரக தொழில் துறை அமைச்சருமான குமாரசாமி நேற்று சென்றார்.
அகண்ட சீனிவாச மூர்த்தியுடன் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிய அவர், பின், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பின், நிருபர்களை சந்தித்த குமாரசாமி, அகண்ட சீனிவாச மூர்த்தி விரைவில், ம.ஜ.த.,வில் இணைவார் என்றார்.
