/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மது விற்பனை சரிவு: கஞ்சா, போதை பொருள் காரணம்?
/
மது விற்பனை சரிவு: கஞ்சா, போதை பொருள் காரணம்?
ADDED : நவ 27, 2025 07:31 AM
பெங்களூரு: கர்நாடக அரசுக்கு அதிகமான வருவாயை தரும் துறைகளில், கலால் துறையும் ஒன்று. இந்த துறை மூலமாகவே, அரசு கருவூலத்துக்கு 20 சதவீதம் வருவாய் கிடைக்கிறது.
இதே காரணத்தால், ஆண்டுதோறும் பட்ஜெட்டில், கலால் துறையின் வருவாய் இலக்கை, அரசு அதிகரிக்கிறது. துறையும் ஒவ்வோர் ஆண்டும், இலக்கை தாண்டி வருவாய் ஈட்டி சாதனை படைக்கிறது.
கொரோனா காலகட்டத்தில், பல்வேறு துறைகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. பொருளாதார நெருக்கடியால் அரசு பரிதவித்தது. அப்போதும் கை கொடுத்தது கலால் துறை தான். மது அதிகமாக விற்றதால், வருவாயும் அதிகம் கிடைத்தது. ஆனால், நடப்பாண்டு மது விற்பனை சரிந்துள்ளது.
தற்போது கிடைத்துள்ள புள்ளி விபரங்களின்படி, 2024ம் ஆண்டு ஏப்ரல் முதல், அக்டோபர் வரை விஸ்கி, பிராந்தி, ரம், ஜின் என அனைத்து மது வகைகளும் 407.40 லட்சம் பாக்ஸ்கள் விற்கப்பட்டுள்ளன.
ஒரு பாக்சில் 8.64 லிட்டர் மது இருக்கும். நடப்பாண்டு அதே காலகட்டத்தில், 403.04 லட்சம் பாக்ஸ்கள் மட்டுமே விற்பனையாகின. இதனால் கலால்துறையின் வருவாய் குறைந்துள்ளது.
வெளிநாட்டு மது வகைகளுடன், உள்நாட்டு மது விற்பனையும் குறைந்துள்ளது.
பொதுவாக பீர் அதிகமாக விற்பனையாகும். இம்முறை பீர் விற்பனையும் குறைந்துள்ளது. 2024ல் 279 லட்சம் பாக்ஸ் பீர் விற்பனையானது. நடப்பாண்டு 228 லட்சம் பாக்ஸ்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.
சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு வந்த பின், வாக்குறுதி திட்டங்களுக்கு நிதி திரட்டும் நோக்கில், மூன்று, நான்கு முறை மது விலை உயர்த்தப்பட்டது.
இதனால் மது பிரியர்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு மாறியிருக்கலாம் என, விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.
கலால் துறை அதிகாரிகள் கூறியதாவது:
முந்தைய ஆண்டுகளில், வருவாய் வசூலில் கலால்துறை, அரசின் இலக்கை தாண்டி, சாதனை செய்தது. 2024ம் ஆண்டு பட்ஜெட்டில், கலால்துறைக்கு 35,530 கோடி ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை கலால்துறை எட்டியது.
நடப்பு 2025 - 2026ம் ஆண்டு, 40,000 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏழு மாதங்களாக, மது விற்பனை குறைந்துள்ளதால், வருவாய் இலக்கை எட்டுவது கடினம் என, தோன்றுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

