/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலால் உஷார்!: கர்நாடகா முழுதும் கண்காணிப்பு பணிகள் தீவிரம்
/
எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலால் உஷார்!: கர்நாடகா முழுதும் கண்காணிப்பு பணிகள் தீவிரம்
எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலால் உஷார்!: கர்நாடகா முழுதும் கண்காணிப்பு பணிகள் தீவிரம்
எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலால் உஷார்!: கர்நாடகா முழுதும் கண்காணிப்பு பணிகள் தீவிரம்
ADDED : மே 09, 2025 12:36 AM

ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில், கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள், 26 சுற்றுலா பயணியரை சுட்டுக் கொன்றனர். இச்சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியையும், கோபத்தையும் உண்டாக்கியது.
இதற்கு பழிதீர்க்கும் வகையில், பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. மேலும், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் ஒன்பது முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் இரண்டு நாட்களுக்கு முன் பதிலடி கொடுத்தனர்.
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, 50 ஆண்டுகளுக்கு பின், மாநிலத்தின் மூன்று இடங்களில் நேற்று முன்தினம் போர்க்கால ஒத்திகை நடத்தப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தானும், நம் மீது நேற்று தாக்குதலை துவங்கியது. இதில், காஷ்மீரில் அப்பாவி பொது மக்கள் சிலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, போலீசாருக்கு கர்நாடக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:
மாநிலத்தின் கே.ஆர்.எஸ்., அணை, ராய்ச்சூரில் உள்ள அனல்மின் நிலையம், கார்வாரில் உள்ள கைகா அணுமின் நிலைய பகுதிகள் மற்றும் அனைத்து அணைகளிலும் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். 24 மணி நேரமும் ரோந்து பணியிலும், கண்காணிப்பிலும் ஈடுபட வேண்டும்.
சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் எல்லைக்கு உட்பட்ட அணைகளின் பாதுகாப்புக்கு அவர்களே பொறுப்பு. பாதுகாப்பில் குறைபாடு இருந்தால், அவர்கள் மீதோ அல்லது அணை நிர்வாக அதிகாரிகள் மீதோ நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம், அணைகளின் பாதுகாப்பை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
வெளியேற்றம்
விதான் சவுதாவில், மாநில தலைமை செயலர் தலைமையில் நடந்த கர்நாடக மேம்பாட்டு நிகழ்ச்சி கூட்டத்திலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இது குறித்து, மாண்டியாவில் முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:
இந்நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், அணைகள் உட்பட தாக்குதல் நடக்கலாம் என கருதப்படும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
கர்நாடகாவுக்கு வந்திருந்த அனைத்து பாகிஸ்தான் நாட்டினரும், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எத்தனை பேர் அனுப்பப்பட்டனர் என்ற தகவல் என்னிடம் இல்லை.
மைசூரை சேர்ந்த மூன்று குழந்தைகள், அவரின் தாயார் மட்டும், விசா காலத்தை நீட்டிக்க கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, மாநிலத்தின் பல இடங்களில் போர் ஒத்திகை நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
உத்தரவு
பெங்களூரில், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அளித்த பேட்டி: போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாவட்ட எஸ்.பி.,க்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மாநிலத்திலும் கர்நாடக மாநில தொழிற் பாதுகாப்பு படையினர் போன்ற சிறப்பு படையினர் உள்ளனர். இவர்களில், சிலருக்கு கமாண்டோ பயிற்சியும் அளிக்கப்பட்டு உள்ளது. பயிற்சி பெற்ற இவர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
ராய்ச்சூர் அனல்மின் நிலையம், உத்தர கன்னடா மாவட்டம், கார்வாரில் உள்ள கைகா அணுமின் நிலையம், கே.எஸ்.ஆர்., அணைகள் உட்பட முக்கிய இடங்களில் கே.எஸ்.ஆர்.பி., படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மாநிலத்தில் போதுமான பாதுகாப்பு வீரர்கள் உள்ளனர். தற்போது உள்ள வீரர்கள் குறைக்கப்படவில்லை. கூடுதலாக வீரர்களை நியமிக்க கோரிக்கை வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறுகையில், ''அணைகள், தொழிற்சாலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். நீர்ப்பாசன துறை அமைச்சரான நான், அணைகளுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தினேன்.
''இது தொடர்பாக, நீர்ப்பாசன துறைக்கு, துணை முதல்வர் உத்தரவிடுவார். இவ்விஷயத்தில் கட்சி வேறுபாடின்றி, மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்படும்,'' என்றார்.