ஓடுபாதையில் உரசிய விமானம் உயிர் தப்பிய 225 பயணியர்
ஓடுபாதையில் உரசிய விமானம் உயிர் தப்பிய 225 பயணியர்
ADDED : செப் 29, 2026 03:41 AM

தேவனஹள்ளி: பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, விமானத்தின் பின்பக்கம் ஓடுபாதையில் உரசியதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் பயணித்த 225 பயணியர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
அசாம் மாநிலம் குவஹாத்தியில் இருந்து, பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு 225 பயணியருடன், நேற்று முன்தினம் 'இண்டிகோ' விமானம் வந்தது. பெங்களூரில் தரையிறங்க முயன்ற போது, அப்போது நிலவிய மோசமான வானிலை காரணமாக, பைலட்டுகள் விமானத்தை மீண்டும் மேல்நோக்கி பறக்க வைத்தனர். இரண்டாவது முறையாக தரையிறங்க முயன்ற போது, விமானத்தின் பின்பக்க பகுதி, ஓடுபாதையில் உரசியது.
சுதாரித்து கொண்ட பைலட்டுகள், விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். விமானத்தில் இருந்து 225 பயணியரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஓடுபாதையில் உரசியதால், விமானத்தின் பின்பகுதி சேதம் அடைந்தது; லேசான விரிசலும் ஏற்பட்டது.
பாதுகாப்பு சோதனைகள், பராமரிப்பு பணிகளுக்காக, அந்த விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து, சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரிக்கிறது.
