47 சதவீதம் கமிஷன் வாங்குறாங்க பெண் எம்.எல்.ஏ., மீது குற்றச்சாட்டு
47 சதவீதம் கமிஷன் வாங்குறாங்க பெண் எம்.எல்.ஏ., மீது குற்றச்சாட்டு
ADDED : பிப் 27, 2026 05:29 AM

ராய்ச்சூர்: கான்ட்ராக்டர்களிடம், 47 சதவீதம் கமிஷன் வாங்குவதாக, ம.ஜ.த., பெண் எம்.எல்.ஏ., கரேம்மா நாயக் மீது, அக்கட்சியின் நிர்வாகியே குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகா, ம.ஜ.த., தலைவர் புட்டண்ணகவுடா கூறியதாவது:
எங்கள் தொகுதி எம்.எல்.ஏ., கரேம்மா நாயக், ம.ஜ.த.,வை சேர்ந்தவர். தேவகவுடா, குமாரசாமி கூறியதால், 2023 தேர்தலில் கரேம்மாவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். தாலுகா தலைவரான என் பேச்சை நம்பி, நிறைய பேர் ஓட்டு போட்டனர்.
அவர் வெற்றி பெற்றதற்கு பின், எங்களை புறக்கணித்து விட்டார். அவருக்கு ஆதரவாக பேசுவோரை மட்டும் உடன் வைத்துள்ளார்.
கான்ட்ராக்டர்களிடம் இருந்து, 47 சதவீதம் கமிஷன் வாங்குகிறார். இதனால், கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. எம்.எல்.ஏ.,வின் செயல்பாடுகள் பற்றி மேலிட தலைவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தன் மீதான குற்றச்சாட்டை கரேம்மா நாயக் மறுத்து உள்ளார். அவர் கூறியதாவது:
நான் இதுவரை யாரிடமும், ஒரு பைசா கூட கமிஷன் வாங்கவில்லை. அத்தகைய தரித்திர நிலைக்கும் நான் வரவில்லை. என் வாழ்க்கையில் பணம், நகை, கார் என, அனைத்தையும் பார்த்து விட்டேன். அனைத்தை யும் இழந்து விட்டேன். எனக்கு எந்த ஆசையும் இல்லை.
என் மீது குற்றம் சொல்வோர், என்னிடம் நேரில் வந்து பேசட்டும். எக்காரணம் கொண்டும் காங்கிரசுக்கு செல்ல மாட்டேன். 2018 தேர்தலிலேயே எனக்கு சீட் கிடைக்க வேண்டியது. கட்சியில் இருந்த சிலர் சதி செய்தனர். இம்முறை வெற்றி பெற்றுள்ளேன். நான் ஏன் வேறு கட்சிக்கு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
