/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயல் அருகே திடீர் அம்பேத்கர் சிலை
/
தங்கவயல் அருகே திடீர் அம்பேத்கர் சிலை
ADDED : ஏப் 13, 2025 07:25 AM

தங்கவயல் : தங்கவயல் அருகே கட்டகாமதேனஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொத்துார் கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு திடீரென அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டு உள்ளது.
தங்கவயல், உரிகம் பேட்டைக்கு 2 கி.மீ., துாரத்தில் உள்ளது கொத்தூர். இங்குள்ள முக்கிய சாலை அருகே, அரசுக்கு சொந்தமான இடத்தில் இப்பகுதி இளைஞர்கள், நேற்று முன்தினம் இரவு திடீரென துாண் அமைத்து, அம்பேத்கர் சிலையை நிறுவி உள்ளனர்.
தகவல் அறிந்த தலித் அமைப்பு தலைவர்களான ஏ.பி.எல்.ரங்கநாதன், முகுந்தன் உட்பட சிலர், நேற்று காலை அப்பகுதிக்கு சென்றனர். அந்த சிலைக்கு மாலை அணிவித்தனர்.
ஏ.பி.எல்.ரங்கநாதன் பேசுகையில், ''அம்பேத்கர் மீதான பற்றுதலால் கிராமத்தினர் சிலையை நிறுவி உள்ளனர். இதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. கிராமத்தினர் முழு ஒத்துழைப்பும் உள்ளது. இச்சிலையை அகற்ற வேண்டாம். சிலைக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.
இது போன்று கிருஷ்ணாபுரம், ராபர்ட்சன்பேட்டை சஞ்சய்காந்தி நகர் பகுதியிலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென சிலை வைக்கப்பட்டது.
தங்கவயலில் ஏற்கனவே 16 அம்பேத்கர் சிலைகள் உள்ளன. இதில் பெமல் தொழிற்சாலை அருகே உள்ள சிலை, உரிகம் சிவராஜ் நகரில் உள்ள சிலை மட்டுமே உலோகத்தால் ஆனவை. மற்றவை சிமென்டால் செய்யப்பட்டது.