/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அதிக லாபம் ஆசை காட்டி ஆந்திர தம்பதி மோசடி
/
அதிக லாபம் ஆசை காட்டி ஆந்திர தம்பதி மோசடி
ADDED : நவ 16, 2025 11:45 PM

தாவணகெரே: ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என, நம்ப வைத்து பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்து, மோசடி செய்த ஆந்திர தம்பதி மீது வழக்கு பதிவாகியுள்ளது.
ஆந்திராவின் அனந்தபூரை சேர்ந்தவர் பொக்கு ஸ்ரீராமுலு, 40. இவரது மனைவி புஷ்பா, 35. இத்தம்பதி, கடந்த மாதம், தாவணகெரே மாவட்டம், ஜகளூர் தாலுகாவின், பல்வேறு கிராமங்களில் வசிக்கும் பெண்களை நேரில் சந்தித்தனர். தங்களை ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என அறிமுகம் செய்து கொண்டனர்.
ரியல் எஸ்டேட்டில், முதலீடு செய்தால் ஒரே வாரத்தில், பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என, ஆசை காட்டினர். தங்கள் வீட்டு அறையில் பணக்கட்டுகளை அடுக்கி வைத்து வீடியோ அனுப்பி மக்களை நம்ப வைத்தனர்.
அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் ரேணுகா என்பவர் தன் நிலத்தை விற்று 33 லட்சம் ரூபாய் கொடுத்தார். மீனா 40 லட்சம் ரூபாய், பிரியங்கா 50 லட்சம் ரூபாய், திருமலேஷ் 17 லட்சம் ரூபாய் கொடுத்தனர்.
சில நாட்கள் கிராமத்தில் தங்கியிருந்த தம்பதி, இரவோடு இரவாக தப்பியோடி விட்டனர். அவர்களின் மொபைல் போன்களும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது.
பணத்தை கொடுத்து ஏமாந்த பெண்கள், ஜகளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசாரும், மோசடி தம்பதியை தேடி வருகின்றனர். ஆந்திராவுக்கு தனிப்படை அனுப்பவும் தயாராகின்றனர்.

