/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அங்கன்வாடி முறைகேடு 2 அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'
/
அங்கன்வாடி முறைகேடு 2 அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'
ADDED : பிப் 21, 2025 05:33 AM
பெங்களூரு: தார்வாடில் அங்கன்வாடி உணவு தானியங்களை முறைகேடாக விற்ற வழக்கில், துணை இயக்குனர், குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலரை, 'சஸ்பெண்ட்' செய்ய கூறி, மகளிர் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் உத்தரவிட்டுள்ளார்.
தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியில் அங்கன்வாடி மையத்தில் இருந்து குழந்தைகள், கர்ப்பிணியருக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு தானியங்களை, காங்கிரஸ் பெண் பிரமுகர் பைதுல்லா கில்லேதார், அவரது கணவர் பரூக் ஆகியோர் ஹலேகப்பூரில் உள்ள குடோனில் மறைத்து வைத்து, வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வதாக, உணவு பொது வினியோக துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் குடோனில் ரெய்டு நடத்திய அதிகாரிகள், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவு தானியங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 18 அங்கன்வாடி ஊழியர்கள் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி புவனேஸ் பாட்டீல் கூறியதாவது:
இம்முறைகேட்டை விசாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதற்கான உத்தரவு இன்று (நேற்று) வெளியிடப்பட்டு உள்ளது. அங்கன்வாடி ஊழியர்களுடன் மேற்பார்வையாளர்கள் உட்பட வேறு யாராவது இதில் ஈடுபட்டுள்ளனரா என்று விசாரணை நடத்தப்படும்.
வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஏற்கனவே அங்கன்வாடி ஊழியர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அரசின் உத்தரவின்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன், மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் உத்தரவின் படி, மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு துறை துணை இயக்குனர் ஹூலிகேம்மா, குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி முத்தண்ணா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
இதில் தொடர்பு உடையவர்களும் சஸ்பெண்ட் செய்யப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.