வலுக்கட்டாயமாக ராஜினாமா முதல்வர் மீது ஹொரட்டி கோபம்
வலுக்கட்டாயமாக ராஜினாமா முதல்வர் மீது ஹொரட்டி கோபம்
ADDED : ஆக 30, 2026 11:28 PM

கதக்: ''என்னிடம் இருந்து மேல்சபை தலைவர் பதவியை வலுக்கட்டாயமாக முதல்வர் பெற்றார்,'' என, மேல்சபையின் முன்னாள் தலைவர் பசவராஜ் ஹொரட்டி தெரிவித்தார்.
கதக்கில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஜூலை 24ம் தேதி இரவு, 11:00 மணிக்கு முதல்வர் சிவகுமார் என்னை தொலைபேசியில் அழைத்து, மேல்சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்யும்படி கூறினார்.
அதற்கு நான், 'சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் துவங்க உள்ளதால், ஆக., 14ம் தேதி மேல்சபை கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துவிட்டு ராஜினாமா செய்கிறேன்' என்றேன். ஆனால், சிவகுமார் ஒப்புக் கொள்ளவில்லை.
விதான் சவுதாவில் என் அலுவலகத்திற்கு வந்த முதல்வர் சிவகுமார், ஒன்றரை மணி நேரம் அமர்ந்திருந்தார். பின், அவரின் தனி செயலரிடம், என் பெயரில் உள்ள 'லெட்டர் ஹெட்' காகிதத்தை கொண்டு வரும்படி கூறினார். அதுமட்டுமின்றி, அவரே தேவையான தகவல்களை 'டைப்' செய்தார்.
என் தரப்பு கருத்தை கூட கேட்காமல், என்னிடம் கையெழுத்து வாங்கினார். இது என்னை மிகவும் காயப்படுத்தியது. மேலும், கதக் மாவட்ட மேம்பாட்டுக்கு என்னால் உதவ முடியாதது வருத்தம் ஏற்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
