திருநங்கையர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அனிதா பிரசாத்
திருநங்கையர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அனிதா பிரசாத்
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 06:52 PM

- நமது நிருபர் -
மை சூரின் போகதியை சேர்ந்தவர் அனிதா பிரசாத், 53. திருநங்கையான இவர், விஸ்டாரிக் ரோபோடிக்ஸ் மற்றும் ஸ்ரீஜன் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். மேலும், அனிதா ஹியூமனிடேரியன் பவுண்டேஷன் என்ற பெயரில், சமூக சேவை அமைப்பையும் நடத்துகிறார்.
கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதி, இவருக்கு கனரக வாகனம் ஓட்ட ஓட்டுநர் உரிமம் கிடைத்தது. இதன்மூலம் கர்நாடக வரலாற்றில் கனரக வாகனம் ஓட்ட வாகன உரிமம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றார்.
தனது பயணம் குறித்து அனிதா பிரசாத் கூறியதாவது:
அடிப்படையில் நான் ஒரு ஆண். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒய்.எஸ்.யு., பல்கலைக்கழகத்தில் மேலாண்மையியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று உள்ளேன். இந்திய அறிவியல் கழகத்தில் கணக்கீட்டு திரவ இயக்கவியல் படித்துள்ளேன். தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில், 29 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த பொறியியல் நிபுணராகவும் பணியாற்றி உள்ளேன்.
கடந்த 2018ம் ஆண்டு என், 45 வயதில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறினேன்.
இதனால் எனது குடும்பம் என்னை கைவிட்டது. சமூகப்புறக்கணிப்பு உட்பட பல சவால்களை எதிர்கொண்டேன். நன்கு படித்து உயர்ந்த பதவியில் இருந்து திருநங்கையாக மாறிய நமக்கே இவ்வளவு சவால்கள் உள்ளதே, படிக்காத திருநங்கையர் என்னென்ன சவால்களை சந்திப்பர் என்று யோசித்து பார்த்தேன்.
ஜெர்மனியில் வசித்த போது விமானம் ஓட்ட பயிற்சி பெற்று, அதற்காக உரிமத்தை வாங்கி இருந்தேன்.
இங்கு கனரக லாரி ஓட்டலாம் என்று நினைத்தேன். அதன்படி, கனரக லாரி ஓட்ட பயிற்சி எடுத்து, ஓட்டுநர் உரிமம் பெற்று விட்டேன். திருநங்கையர் சுயசார்புடன் வாழ வேண்டும் என்று நினைக்கும் நான், வாகனம் ஓட்ட நினைக்கும் திருநங்கையருக்கு தேவையான உதவிகளை செய்கிறேன்.
திருநங்கையர் பிச்சை எடுப்பதையோ, பாலியல் தொழில் செய்வதையோ நான் விரும்பவில்லை. அவர்களும் கவுரவமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். பெங்களூரு முதல், பெலகாவி வரை பார்சல்கள் ஏற்றி செல்லும் லாரி நிறுவனம் துவங்கி, முழுக்க, முழுக்க திருநங்கையரை வைத்து நிறுவனம் நடத்த வேண்டும் என்பது எனது இலக்கு.
இவ்வாறு அவர் கூறினார்.
