/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி 'அன்னபாக்யா' அரிசி பறிமுதல்
/
வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி 'அன்னபாக்யா' அரிசி பறிமுதல்
வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி 'அன்னபாக்யா' அரிசி பறிமுதல்
வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி 'அன்னபாக்யா' அரிசி பறிமுதல்
ADDED : ஆக 27, 2025 10:51 PM

கொப்பால் : ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய அரிசியை, துபாய்க்கு ஏற்றுமதி செய்ய முயற்சி நடந்துள்ளது. இதை தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
முதல்வர் சித்தராமையா அரசு, மாநில மக்களின் நலனை கருதி, அன்னபாக்யா திட்டத்தை செயல்படுத்தியது. இத்திட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். சில அரிசி மில் உரிமையாளர்கள், அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதை பாலீஷ் செய்து உயர் ரக அரிசியாக்கி, வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கின்றனர்.
பயனாளிகளுக்கு பணத்தாசை காட்டி, நியாய விலை கடை உரிமையாளர்கள், அரிசியை பதுக்கி, மில் உரிமையாளர்களுக்கு விற்கும் சம்பவங்கள், ஆங்காங்கே நடக்கின்றன. இதே போன்று, அன்னபாக்யா அரிசியை, துபாய்க்கு கடத்த முற்பட்டது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கொப்பால் மாவட்டம், கங்காவதி தாலுகாவின், கனககிரி சாலையில் உள்ள, ஏ.பி.எம்.சி., கிட்டங்கியில், அன்னபாக்யா அரிசியை பதுக்கி வைத்து, வெளி மார்க்கெட்டில் விற்கப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து சில சங்கத்தினர், அங்கு சென்று பார்வையிட்ட போது, துபாய் முகவரி உள்ள 25 கிலோ பைகளில், அரிசியை நிரப்புவது தெரிந்தது. இது குறித்து, தாசில்தாரிடம் தகவல் தெரிவித்தனர்.
கங்காவதி தாசில்தார் ரவி அங்கடி, போலீசாருடன் நேற்று முன்தினம் மதியம் கிட்டங்கியில் சோதனை நடத்திய போது, துபாய் முகவரி உள்ள பைகளில், அரிசியை நிரப்புவது கண்டு பிடிக்கப்பட்டது.
அதிகாரிகள் சோதனை நடத்த வருவதை அறிந்த, கிட்டங்கி நிர்வாகி சோமசேகர் தப்பியோடிவிட்டார். அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது.
அதிகாரிகள் அந்த கிட்டங்கிக்கு பூட்டு போட்டனர். அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்தனர்.
சோமசேகர், அரிசி கடத்தலில் தொடர்புள்ள, 'உமா சங்கர்' மில் உரிமையாளர் உமேஷ், லாரி உரிமையாளர், ஓட்டுநர் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது.
கடந்த 2022ல், இதே கிட்டங்கியில், 168 குவிண்டால் அன்னபாக்யா அரிசி பதுக்கப்பட்டிருந்தது. இதை ஆய்வு செய்த, அன்றைய கொப்பால் மாவட்ட கலெக்டர் நளின் அதுல், அரிசியை நியாய விலைகளுக்கு அனுப்பும்படி உத்தரவிட்டார்.
ஆனால் அவரது உத்தரவுக்கு பின்னரும், அரிசி கிட்டங்கியிலேயே இருந்தது. அதை தற்போது, வெளிநாட்டுக்கு கடத்த முயற்சித்துள்ளனர்.
உணவுத்துறை கிட்டங்கியில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அன்னபாக்யா அரிசி பதுக்கப்பட்டதாக, தகவல் வந்தது. நாங்கள் அங்கு சென்று, சோதனையிட்டு கிட்டங்கிக்கு பூட்டு போட்டோம். அரிசியை கடத்த முற்பட்டோர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரிசியை கடத்த முற்பட்ட லாரியை, போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தோம்.
- ரவி அங்கடி, தாசில்தார், கங்காவதி