காட்டு யானைக்கு மற்றொருவர் பலி: கிராமத்தினர் போராட்டத்தால் பதற்றம்
காட்டு யானைக்கு மற்றொருவர் பலி: கிராமத்தினர் போராட்டத்தால் பதற்றம்
UPDATED : நவ 17, 2026 12:00 AM
ADDED : நவ 16, 2026 07:46 PM
ஹாசன்: காட்டு யானை தாக்குதலுக்கு மற்றொரு தொழிலாளி பலியானதால், மக்கள் கோபம் அடைந்து, போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஹாசன் மாவட்டம், பேலுார் தாலுகாவின் நாகேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஹபீஸ் உர் ரஹ்மான், 57. இவர், இதே கிராமத்தில் உள்ள காபி தோட்டத்தில் பணியாற்றினார். இவர், நேற்று காலை வழக்கம் போல தோட்டத்துக்கு சென்றபோது, அங்கு காட்டு யானை இருப்பதை கவனிக்காமல், பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த காட்டு யானை, அவரை தாக்கியது. தப்பியோட முடியாமல் கீழே விழுந்த அவரை, மிதித்து கொன்றது. இரண்டு நாட்களுக்கு முன், பேலுாரின் குஷாவரா கிராமத்தின் அருகில், காட்டு யானை தாக்கி, ஜெயம்மா உயிரிழந்தார். தற்போது மற்றொரு தொழிலாளி பலியானதால், மக்கள் கோபமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரேஹள்ளி போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். ஹபீஸ் உடலை மீட்க விடாமல், கிராமத்தினர் தடுத்தனர். அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர். கிராமத்தினரை ஒதுக்கிவிட்டு, உடலை மீட்க போலீசார் சிரமப்பட்டனர். நுாற்றுக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
