ADDED : மார் 22, 2026 06:22 AM

ஹாவேரி: சிக்கமகளூரு குதிரேமுக் தேசிய பூங்காவை போன்று, ஹாவேரியிலும் மல்லேஸ்வரா மலை வனப்பகுதியிலும் சமூக விரோதிகள் தீ வைத்ததில், நுாற்றுக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலானது.
சிக்கமகளூரின் குதிரேமுக் தேசிய பூங்காவின் 25க்கும் மேற்பட்ட இடங்களில் மர்ம நபர்கள் வைத்த தீயினால், நுாற்றுக்கணக்கான ஏக்கர் 'சோலைக்காடு' நாசமானது. பல பறவைகள், விலங்குகள் தீயில் உயிரிழந்தன.
அதுபோன்று ஹாவேரி மாவட்டம் ராணிபென்னுார் தாலுகாவில் அரேமல்லபுரா, இரோனி கிராமங்களுக்கு இடையே உள்ள சுற்றுலா தலமான மல்லேஸ்வரா மலையிலும், சமூக விரோதிகள் தீ வைத்தனர்.
கோடை வெப்பத்தால் காய்ந்திருந்த மரங்கள், தீயின் சுவாலையால் எரிந்தன. அரியவகை தாவரங்கள், விலங்குகள் உயிரிழந்தன.
இப்பகுதி பறவைகளின் வாழ்விடமாகவும், கலைமான்கள் உட்பட ஏராளமான விலங்குகள் நிறைந்த சரணாலயமாகவும் விளங்குகிறது. தீயை பார்த்த விலங்குகள் அங்கிருந்து நாலாபுறமும் ஓடின.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ராணிபென்னுார் கிராமப்புற போலீசார் விசாரிக்கின்றனர்.
