ADDED : ஜன 30, 2026 06:35 AM
பெங்களூரு: முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் தரப்புக்கு இடையிலான அதிகார மோதலால், அபெக்ஸ் கூட்டுறவு வங்கி தலைவர் பதவி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் தலைமையகமாக, அபெக்ஸ் வங்கி உள்ளது. இதன் தலைவராக இருந்த பா.ஜ.,வின் பெல்லி பிரகாஷ், துணை தலைவராக இருந்த ம.ஜ.த.,வின் ஹரிஷ் கவுடா ஆகியோரின், பதவி காலம் நேற்றுடன் முடிந்தது. புதிய தலைவர், துணை தலைவரை தேர்ந்து எடுக்க, நேற்று தேர்தல் நடக்க இருந்தது.
தலைவர் பதவிக்கு சித்தராமையா ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ராஜண்ணா, சிவகுமார் ஆதரவாளரான காங்கிரஸ் எம்.எல்.சி., ரவி இடையில், கடும் போட்டி எழுந்தது. ரவிக்கு பதவியை விட்டு தர கோரி, ராஜண்ணாவுடன் இரு முறை சிவகுமார் பேசினார்.
ஆனால் ராஜண்ணா மறுத்து விட்டார். நேற்று காலையில் சாம்ராஜ்பேட்டில் உள்ள, அபெக்ஸ் வங்கி தலைமை அலுவலகத்தில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்தன. ராஜண்ணா, ரவி இருவரும் வந்தனர். ஆனால் இருவருமே வேட்புமனு தாக்கல் செய்யாமல், நேரத்தை வீணடித்தனர்.
இதையடுத்து தலைவர் பதவிக்கு பெல்லி பிரகாசும், துணை தலைவர் பதவிக்கு காங்கிரஸ் எம்.எல்.சி., சரணகவுடா பையாபுராவும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுபற்றி அறிந்த சித்தராமையா இருவரிடமும் பேசி, வேட்புமனுவை வாபஸ் பெற வைத்தார்.
தலைவர் பதவிக்கு முதல்வர், துணை முதல்வர் இடையிலான அதிகார மோதல் பற்றி, கட்சி மேலிட கவனத்திற்கும் சென்றது. சித்தராமையாவிடம் மொபைல் போனில் பேசிய, மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, தலைவர் பதவிக்கான தேர்தலை தற்காலிகமாக ஒத்திவைக்கும்படி கூறினார். இதையடுத்து தேர்தலை ஒத்திவைத்து கூட்டுறவு துறை உத்தரவிட்டது.
