இரண்டு தொகுதி இடைத்தேர்தல் சட்டசபை தேர்தலுக்கு முன்னோடியா?
இரண்டு தொகுதி இடைத்தேர்தல் சட்டசபை தேர்தலுக்கு முன்னோடியா?
ADDED : ஏப் 01, 2026 03:42 AM

மாநிலத்தில் நடைபெற உள்ள இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல் அதற்கான முன்னோடியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தாவணகெரே தெற்கு, பாகல்கோட் சட்டசபை தொகுதிகளில் வரும், 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, எதிர்க்கட்சி தலைவர் அசோக் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளனர்.
பா.ஜ., - காங்., மோதல் தாவணகெரே தெற்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வருக்கும், பா.ஜ., தொண்டர்களுக்கும் இடையே ஏற்கனவே மோதல் துவங்கி விட்டது. 'அரசை பலப்படுத்தவும், தனக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும் காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டும்' என, பிரதீப் ஈஸ்வர் பிரசாரம் செய்து வருகிறார்.
அதேபோன்று பா.ஜ.,வும், மாநில அரசின் நிர்வாக தோல்வி உட்பட பல பிரச்னைகளை முன் வைத்து பிரசாரம் செய்து வருகிறது. இரு தொகுதிகளையும் தக்க வைத்து கொள்ள காங்கிரசும், அதை பறிக்க பா.ஜ.,வும் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளன.
தாவணகெரே தெற்கு, பாகல்கோட் ஆகிய இரு தொகுதிகளில் நடக்க உள்ள இடைத்தேர்தலால், காங்கிரஸ், பா.ஜ.,வுக்கு எந்த ஆதாயமோ அல்லது இழப்போ இல்லை.
இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், காங்கிரசின் பலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை. அதுபோன்று, பா.ஜ.,வுக்கு கூடுதலாக இரண்டு தொகுதிகள் கிடைக்குமே தவிர, பெரிதாக எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது.
இத்தேர்தல் முடிவு, 2028 சட்டசபை தேர்தலுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்று கூறுவது தவறு. ஏனென்றால், கடந்த காலங்களில் நடந்த பல இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற ஆளும் கட்சிகள், அடுத்த சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளன.
முன்னோடியல்ல இதற்கு சிறந்த உதாரணமாக, 2019ல் எடியூரப்பா ஆட்சி அமைக்க மேற்கொண்ட முயற்சியை சொல்லலாம். பின், 17 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்களில், ஹொஸ்கோட், அதானி தொகுதியை தவிர, பா.ஜ., 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதன் அடிப்படையில், எடியூரப்பா உட்பட பல தலைவர்கள், '2023ல் நாங்கள் ஆட்சிக்கு வருவோம்' என, சட்டசபையில் முழக்கமிட்டனர். ஆனால், 2023ல் நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி, 136 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது.
அதேபோல, 2018ம் ஆண்டின் முற்பகுதியில், காங்கிரஸ் அரசின் ஆட்சி காலம் இறுதி கட்டத்தை நெருங்கிய போது, குண்டுலுபேட், நஞ்சன்கூடு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.
இது, சட்டசபை தேர்தலுக்கான முன்னோடியாக கருதப்பட்டது. ஆளும் கட்சியான காங்கிரசும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என்று சித்தராமையாவும், பரமேஸ்வரும் கூறினர்.
ஆனால், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ், 78 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசு, 104 இடங்களில் வென்றது. 36 இடங்களை கைப்பற்றி குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த.,வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததால், குமாரசாமி முதல்வராக பதவியேற்றார்.
கடந்த, 20 ஆண்டு கால மாநில அரசியல் வரலாறு, இடைத்தேர்தல் முடிவுகள், ஒருபோதும் சட்டசபை தேர்தலுக்கான முன்னோடியாக இருந்ததில்லை என்பதே நிதர்சனம்.
மக்கள் மனநிலை தொகுதி வாக்காளர்கள், எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போடுவதை விட, ஆளும் கட்சி உறுப்பினருக்கு ஓட்டு போட்டால், தொகுதி வளர்ச்சி அடையும் என்ற எண்ணத்தில் ஓட்டு போடுகின்றனர்.
மேலும் ஒரு குடும்பத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதி இறந்தால், அவர்களின் குடும்பத்தில் இருந்து போட்டியிடுவோரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற விதிமுறையையும் பின்பற்றுகின்றனர்.
தற்போது நடக்க உள்ள இரு தொகுதிகளிலும் அனுதாப அலையினால், ஆளும் கட்சிக்கு சாதகமாக முடிவு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, இத்தேர்தல் அடுத்த சட்டசபை தேர்தலுக்கான முன்னோடியா என்றால் இல்லை என்பதே எதார்த்தம்.
- நமது நிருபர் -
