/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராஜினாமா செய்ய தயாரா? முதல்வருக்கு பா.ஜ., கேள்வி
/
ராஜினாமா செய்ய தயாரா? முதல்வருக்கு பா.ஜ., கேள்வி
ADDED : செப் 06, 2025 06:45 AM

பெங்களூரு: ''மின்னணு ஓட்டு இயந்திரம் மூலம், 2023ல், ஆட்சியை பிடித்த முதல்வர் சித்தராமையா உட்பட 136 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்கத் தயாரா?'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கேள்வி எழுப்பி உள்ளார்.
பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மாநில உள்ளாட்சித் தேர்தல்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக, மீண்டும் ஓட்டுச்சீட்டு நடைமுறையை அமல்படுத்த, மாநில தேர்தல் கமிஷனுக்கு சிபாரிசு செய்ய, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா நேற்று தன், 'எக்ஸ்' பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:
கர்நாடகாவில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில், ஓட்டுச் சீட்டுகளை பயன்படுத்த முடிவு செய்திருப்பதன் மூலம், கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசே, தேர்தலில் மோசடி மூலம் ஆட்சிக்கு வந்ததை ஒப்புக் கொண்டுள்ளது.
கர்நாடகாவில் 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், மின்னணு ஓட்டு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இந்த ஓட்டு இயந்திரம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 136 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும்; 2024ல் கர்நாடகாவில் இருந்து லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது காங்கிரஸ் எம்.பி.,க்களும் முதலில் ராஜினாமா செய்ய வேண்டும்.
அவர்கள் மீண்டும் போட்டியிட்டு, ஓட்டுச்சீட்டு மூலம் வெற்றி பெற வேண்டும். இல்லையெனில், தேர்தல் மோசடி மூலம், தாங்கள் ஆட்சிக்கு வந்தோம் என்பதை காங்கிரஸ் அரசு ஒப்புக் கொள்ள வேண்டும்.
காங்கிரசார், வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும். ஓட்டுச்சீட்டு நடைமுறையால், கள்ள ஓட்டளிப்பு, தேர்தல் மோசடி, தேர்தல் வன்முறை, தேர்தல் முறைகேடுகள் என அதிகளவிலான புகார்கள், நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களில் பதிவாகின.
தேர்தலில் மோசடி, முறைகேடுகள் தொடர்பாக, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், அவசர சட்டத்தை அவர் அமல்படுத்தியதை நாட்டு மக்கள் மறக்கமாட்டார்கள்.
ஓட்டுச்சீட்டு மூலம் தேர்தல்களில் முறைகேடுகள், மோசடி செய்வதில் காங்கிரசார் கைதேர்ந்தவர்கள். சமீபத்திய தொடர் தோல்விகளால், விரக்தி அடைந்துள்ளனர்.
அதனால் தான் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், தேர்தல் மோசடி என்ற பெயரில் ஆதாரமற்ற, அற்பமான வாதங்களை பேசி வருகிறார். இதை ஆதரிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசும், உள்ளாட்சித் தேர்தல்களில் ஓட்டுச்சீட்டுகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
நாடு உட்பட உலகமே தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வரும் நிலையில், கர்நாடக அரசு, தொழில்நுட்பத்தை அவமதித்து, மாநிலத்தை இருண்ட காலத்துக்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கிறது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், ஓட்டுச்சீட்டுகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட தேர்தல்களில், எவ்வளவு முறைகேடுகள் நடந்தன என்பதற்கான பதிவுகள் இன்னும் உள்ளன. 1990 லோக்சபா தேர்தலில், தாவணகெரேயில் பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பின், மறு எண்ணிக்கையின் போது, காங்கிரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அந்த நேரத்தில், தாவணகெரேயில் உள்ள ஓட்டு எண்ணும் மையத்தின் கழிப்பறைகளில், பா.ஜ.,வின் ஓட்டுச்சீட்டுகள் கொட்டப்பட்டதாக, செய்திகள் வெளியாகியிருந்தன.
முறைகேடுகள், ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுதல், கள்ள ஓட்டுப்பதிவு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கில், ஓட்டுச்சீட்டு அடிப்படையிலான தேர்தலை காங்கிரஸ் ஆதரிக்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.