அர்ஜுனா யானை நினைவிடம் 6ல் திறப்பு: ஈஸ்வர் கன்ட்ரே
அர்ஜுனா யானை நினைவிடம் 6ல் திறப்பு: ஈஸ்வர் கன்ட்ரே
ADDED : மே 03, 2026 11:29 PM

பெங்களூரு: ''ஹாசனில் வனத்துறை பணியாளர்கள், கால்நடை மருத்துவர்களின் உயிரை காப்பாற்ற, தன் உயிரை தியாகம் செய்த அர்ஜுனா யானையின் சிலை, மே 6ம் தேதி திறக்கப்படும்,'' என வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஹாசன் மாவட்டம், யசலுாரில் காட்டு யானையை பிடிக்கும் பணியில் அர்ஜுனா யானை உட்பட பல யானைகள் ஈடுபட்டிருந்தன. அப்போது காட்டு யானை கால்நடை மருத்துவர்கள், வனத்துறை பணியாளர்களை தாக்க முற்பட்டது.
அர்ஜுனா, காட்டு யானையுடன் ஆக்ரோஷமாக மோதியது. இதில் அர்ஜுனா யானை உயிரிழந்தது. அதன் நினைவை போற்றும் வகையில், உயிரிழந்த இடத்திலும், அது தங்கியிருந்த நாகரஹொளே பல்லே யானைகள் முகாமிலும் நினைவிடம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, அர்ஜுனாவின் பெருமையையும், சாகசங்களையும் எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில், பல்லே முகாமில் ஏற்கனவே நினைவிடம் திறக்கப்பட்டு உள்ளது. அதுபோன்று யசலுாரில் உள்ள நினைவிடம், வரும் 6ம் தேதி திறக்கப்படும்.
இவ்விரு இடங்களிலும் அர்ஜுனா உட்பட பல்வேறு யானை, புலி, சிறுத்தை நடவடிக்கைகள், தசரா விழாவில் பங்கேற்ற படங்களை வைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
யசலுாரில் நினைவிடம் கட்டி பல மாதங்கள் ஆகிவிட்டன. இருப்பினும், சில காரணங் களால் நினைவிடம் திறப்பு விழா தாமதமானது. தற்போது திறப்பு விழா நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு வகிக்கும் வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா, உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்வர்.
ஷிவ மொக்கா மாவட்டத்தில் உள்ள தாவரெகொப்பா புலி, சிங்கம் சரணாலயத்தில், நீர்யானை தாக்கி, கால்நடை டாக்டர் சமீஷா ரெட்டி உயிரிழந்தார். அவருக்கு, பன்னர் கட்டா உயிரியல் பூங்கா அல்லது வேறு இடத்தில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
