பயங்கரவாதிகள் போல காங்., அரசு பா.ஜ.,வின் அசோக் குற்றச்சாட்டு
பயங்கரவாதிகள் போல காங்., அரசு பா.ஜ.,வின் அசோக் குற்றச்சாட்டு
ADDED : செப் 13, 2026 11:10 PM

பெங்களூரு: 'விநாயகர் ஊர்வலத்தில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை பார்க்கும் போது, தலிபான் பயங்கரவாதிகள் அரசு போல காங்கிரஸ் அரசு செயல்படுகிறது' என, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
'மைசூரு லிங்க் ரோட்டில் உள்ள மசூதி தெருவில், விநாயகர் ஊர்வலம் செல்லக்கூடாது; இதை மீறுவோரை கைது செய்வேன்' என டி.நரசிபுரா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தனஞ்செய் கூறினார். இது, சர்ச்சையை ஏற்படுத்தியது.
இன்ஸ்பெக்டர், குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக ஹிந்து அமைப்பினர் குற்றஞ்சாட்டினர். பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹாவும் எதிர்ப்பு தெரிவித்தார். 'இது போன்ற கருத்துகளை மீண்டும் தெரிவித்தால், போலீஸ் நிலையத்தை முற்றுகையிடுவேன்' என, நேற்று முன்தினம் கூறினார்.
சிறை கதவுகள் உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், ''மைசூரை சேர்ந்த ரவுடி ஒருவர், போலீஸ் நிலையத்தை முற்றுகையிடுவேன் என கூறி உள்ளார். அந்நபர் வாரத்திற்கு ஒரு முறை ஊடகங்கள் முன்னிலையில் பேசி, தனது இருப்பை காண்பிக்கிறார்.
போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயல்பவர்களுக்கு பரப்பன அக்ரஹாரா சிறைக்கதவுகள் திறந்தே இருக்கும்,'' என்றார்.
இப்படி, பிரதாப் சிம்ஹாவுக்கு, பிரியங்க் கார்கே மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.
இந்த விவகாரம் குறித்து, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
மைசூரு டி.நரசிபுரா இன்ஸ்பெக்டர் தனஞ்செய், இளைஞர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு மிரட்டி உள்ளார்.
எந்த மசூதிக்கு அருகிலும் செல்லக்கூடாது; ஊர்வலம் நடத்தக்கூடாது; பட்டாசுகள் வெடிக்கக்கூடாது; கோஷங்கள் எழுப்பக்கூடாது என்று அவர் மிரட்டினார்.
இது, மைசூரில் மட்டும் நடக்கும் பிரச்னை அல்ல. கர்நாடகா முழுதும் இது போன்ற பிரச்னைகள் நடக்கின்றன.
விநாயகர் ஊர்வலத்தில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை பார்க்கும் போது, தாலிபான் அரசு போல, காங்கிரஸ் அரசு செயல்படுகிறது. அனைத்து மசூதிகளிலும் அதிகாலை 4:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை ஒலிபெருக்கிகளில் கோஷங்கள் ஒலிக்கின்றன. இதற்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படுவதில்லை.
விநாயகர் சதுர்த்தியின் போது மட்டும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது என்பதில் நியாயமில்லை. முதல்வர் சிவகுமார், தேர்தலின் போது மட்டும் ஹிந்துவாக இருப்பார்.
உண்மையிலேயே அவர் ஒரு ஹிந்துவாக இருந்தால், போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
