ADDED : செப் 12, 2026 11:49 PM
பெங்களூரு: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, பலரும் சொந்த ஊருக்கு புறப்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக ஓசூர் சாலை, துமகூரு சாலை, ஹெப்பால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
பெங்களூரு நகரின் பல வெளிநாட்டு நிறுவனங்களில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை, நாளை விநாயகர் சதுர்த்தி என, தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், பலர் நேற்று முன்தினம் இரவே, அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டு விட்டனர்.
இதனால் ஓசூர் சாலை, துமகூரு சாலை, ஹெப்பால் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. நேற்றும் பலர் ஊருக்கு புறப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
பெங்களூரு அரண்மனை சாலையில் இருந்து, ஹெப்பால் வரையிலான 4 கி.மீ., துாரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 4 கி.மீ., துாரத்தை கடக்க, பல மணி நேரமானது. குறிப்பாக, விமான நிலையத்திற்கு செல்ல விரும்பியவர்கள் திண்டாடினர்.
அரசு பஸ்கள், தனியார் பஸ்களில் பயணியர் நிரம்பி வழிந்தனர். பலர் நின்றபடியே தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டனர்.
