கம்பாலா போட்டி நடத்த ரூ.5 கோடி வேண்டும் அசோசியேஷன் கோரிக்கை
கம்பாலா போட்டி நடத்த ரூ.5 கோடி வேண்டும் அசோசியேஷன் கோரிக்கை
ADDED : செப் 12, 2026 11:49 PM
மங்களூரு: 'கம்பாலா விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்ய, அரசு சிறப்பு நிதியுதவி வழங்க வேண்டும். அடுத்த பட்ஜெட்டில் கம்பாலாவுக்கு, ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்' என, கர்நாடக கம்பாலா கமிட்டி வேண்டுகோள் விடுத்துள்ளது.
கர்நாடக கம்பாலா கமிட்டி தலைவர் தேவி பிரசாத் ஷெட்டி தலைமையிலான குழுவினர், முதல்வர் சிவகுமார் மற்றும் அரசு தலைமை செயலர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள மனு:
கடலோர மாவட்டங்களில், ஆண்டு தோறும் நடத்தப்படும் கம்பாலா விளையாட்டை, உள்நாடு, வெளிநாடுகளின் லட்சக்கணக்கான மக்கள் பார்க்கின்றனர். ஒவ்வொரு முறை கம்பாலா ஏற்பாடு செய்ய, 4-0 லட்சம் ரூபாய் முதல், 50 லட்சம் ரூபாய் செலவாகிறது.
போட்டியில் பங்கேற்ற எருமைகளுக்கு, ஓட்டக்காரர்களுக்கு தங்கப்பதக்கம், ரொக்கம் பரிசளிக்கப்படுகிறது.
கம்பாலா வெறும் சம்பிரதாய கலையாக இல்லாமல், சுற்றுலா மற்றும் விளையாட்டு துறைக்கு ஊக்கமளிக்கும் விளையாட்டாகும். மற்ற மாவட்டங்களில் நடக்கும் கம்பாலா விளையாட்டுக்கு, விளையாட்டு துறை சார்பில், 2.5 கோடி ரூபாய், சுற்றுலாத்துறை சார்பில் 2.5 கோடி ரூபாயும் சிறப்பு நிதியுதவி வழங்க வேண்டும்.
கர்நாடக அரசு, விளையாட்டு ஆணையத்தின் கீழ் அங்கீகாரம் அளித்து, மாநில கம்பாலா அசோசியேஷன் அமைத்திருப்பது, கம்பாலாவின் கவுரவத்தை அதிகரித்துள்ளது.
இது கடலோர மாவட்டத்தின், பெருமைக்குரிய விளையாட்டாகும். மங்களூரில் அமைச்சரவை கூட்டம் நடக்கவுள்ளதால், அதில் கம்பாலாவுக்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
