ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் வாங்கும் அதிகாரிகள்: அரசுக்கு அசோக் கேள்வி
ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் வாங்கும் அதிகாரிகள்: அரசுக்கு அசோக் கேள்வி
ADDED : செப் 01, 2026 03:20 AM

பெங்களூரு: 'மங்களூரில் அமைச்சர்கள் பெயரில் பஞ்சாயத்து துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களிடம் 7 சதவீதம் கமிஷன் வாங்குதவாக முதல்வர் சிவகுமாருக்கு காங்., - எம்.எல்.ஏ., அசோக்குமார் ராய் எழுதிய கடிதம் தொடர்பாக முதல்வர் மவுனமாக இருப்பதன் காரணம் என்ன?' என்று எதிர்க்கட்சி தலைவர் அசோக் கேள்வி எழுப்பி உள்ளார்.
கர்நாடக ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக மங்களூரு பிரிவு அதிகாரிகள், அமைச்சர்கள் பெயரை சொல்லி ஒப்பந்ததாரர்களிடம் 7 சதவீதம் கமிஷன் வாங்குவதாக முதல்வர் சிவகுமாருக்கு புத்துார் தொகுதி காங்., - எம்.எல்.ஏ., அசோக்குமார் ராய் கடிதம் எழுதினார்.
கடிதத்தில், அமைச்சரின் பெயர் எதுவும் குறிப்பிடவில்லை. இருப்பினும், மாவட்ட பொறுப்பு அமைச்சர் காதர், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரேவின் பெயரை சொல்லியே அதிகாரிகள் கமிஷன் கேட்டதாக தெரியவந்தது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வே ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து முதல்வருக்கு கடிதம் எழுதியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து, எதிர்க்கட்சி தலைவர் அசோக் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநில அரசு மீது எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினால், அதை வெறும் அரசியல் என சிவகுமார் கூறுகிறார். தற்போது, சொந்தக்கட்சி எம்.எல்.ஏ.,வே ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார். இதற்கு அவர் என்ன பதிலளிக்க போகிறார். ஒப்பந்ததாரர்களை மிரட்டி 7 சதவீதம் கமிஷன் வசூலிக்கும் அரசு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள். மாதந்தோறும் லஞ்சம் வாங்கும் கமிஷன் அரசுக்கு, துாய ஆட்சி என்று பேச தகுதியில்லை.
அமைச்சர் காதர் பெயரில், கமிஷன் வசூலிக்கப்படுகிறது. கமிஷன் தொகை கட்சி மேலிடத்திற்கு செல்கிறது. மக்கள் வரிப்பணத்தில் செய்யப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள், கமிஷனிலேயே செலவிடப்படுகிறது. இவ்விஷயத்தில் முதல்வர் சிவகுமார் அமைதியாக இருப்பதற்கான காரணம் என்ன.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். வாக்குறுதி எனும் பெயரில் நடக்கும் மோசடியை நிறுத்துங்கள். மாநில அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடப்பது அம்பலமாகி உள்ளது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
