கிரேட்டர் பெங்களூரு திருத்த மசோதாவை தாக்கல் செய்து, துணை முதல்வர் சிவகுமார் பேசும்போது, “இந்த மசோதா மீது பேசுவதற்கு, பா.ஜ.,வின் முனிரத்னா உட்பட பெங்களூரு எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் வாய்ப்பு தருவோம்,” என்றார்.
அப்போது குறுக்கிட்ட முனிரத்னா, “என்னை நீங்கள் ஞாபகம் வைத்துள்ளதற்கு நன்றி,” என்றார். “நீங்கள் பல வழக்குகளில் சிக்கி சுற்றித் திரிகிறீர்கள். நீங்கள் என்னை மறந்து இருக்கலாம்,” என, சிவகுமார் கூறினார். “நம் இருவர் மீதும் இருக்கும் வழக்கு குறித்து, சி.பி.ஐ., விசாரிக்கட்டும்,” என, முனிரத்னா கூறினார்.
சட்டவிரோத கட்டடங்களை முறைப்படுத்த அனுமதிக்கும் மசோதாவை நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் பைரதி சுரேஷ் நேற்று தாக்கல் செய்தார்.
கர்நாடக துறைமுகங்கள் திருத்த மசோதா - 2025 சட்டசபையில் ஒருமனதாக நேற்று நிறைவேற்றப்பட்டது.
“கடந்த 2023ம் ஆண்டு முதல் கடந்த ஜூலை வரை மாநிலத்தில் பல துறைகளில் பணி செய்யும் 218 அதிகாரிகள் வீடுகளில், லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர். இதுவரை ஒருவர் கூட குற்றவாளியாக அறிவிக்கப்படவில்லை,” என, மேல்சபையில் பா.ஜ., உறுப்பினர் அருண் கேள்விக்கு, முதல்வர் சித்தராமையா பதில் அளித்தார்.

