ADDED : டிச 12, 2025 06:53 AM
*புதிய சுகாதார மையங்கள்
''பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மாநிலம் முழுதும் புதிய ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சமூக சுகாதார மையங்கள் அமைக்க ஆய்வு செய்யப்பட்டு, தேசிய சுகாதார கொள்கை விதிமுறையின்படி, அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இதற்காக ஹிமான்ஷு பூஷன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது'' என சட்டசபையில் சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
*ஐ.டி.ஐ., உபகரணங்களுக்கு ரூ.50 கோடி
''மாநிலத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ., எனும் தொழிற் பயிற்சி நிறுவனங்களுக்கு, திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி, இயந்திரங்கள் கொள்முதல் செய்ய, 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான டெண்டர் செயல்முறை, ஏற்கனவே நிறைவடைந்து விட்டது,'' என்று சட்டசபையில் திறன்மேம்பாடு துறை அமைச்சர் சரண்பிரகாஷ் பாட்டீல் தெரிவித்தார்.
*வன அழிப்பு ஆய்வு குழு
''கர்நாடகாவில் 2022 முதல் மொத்தம் 8.11 லட்சம் ஹெக்டேர் வன நிலம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. வன பகுதியை அடையாளம் காண குழு அமைக்கப்பட்டு உள்ளது. நிலங்களை அடையாளம் காண, வனம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு கூட்டு கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இக்குழு, ஆறு மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்,'' என சட்டசபையில் வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார்.
*உயர்நிலைப்பள்ளிக்கு அனுமதி
''தேவதுர்கா சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அம்ராபூர் கிராஸ் அல்லது நவிலகுடா கிராமத்தில் அரசு அல்லது அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள் இல்லை. எனவே, இவ்விரு பள்ளிகளில் ஒரு பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த அரசு ஒப்புதல் அளிக்கும். இதனால் நவிலகுடா, பாகூர், நீல்வஞ்சி, கரடிகுடா, மண்டலகுடா, ஹேருண்டி கிராம குழந்தைகள் பயனடைவர்,'' என்று சட்டசபையில் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை அமைச்சர் மதுபங்காரப்பா தெரிவித்தார்.

