ADDED : டிச 17, 2025 06:36 AM
''பெங்களூரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை தொடர்பாக, நுகர்வோரை ஏமாற்றிய 2,334 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 2,250 வழக்குகளுக்கு தீர்வு கிடைத்து உள்ளது,'' என்று, மேல்சபையில் காங்கிரஸ் உறுப்பினர் ரமேஷ் பாபு எழுப்பிய கேள்விக்கு, நுகர்வோர் துறை அமைச்சர் முனியப்பா பதில் அளித்தார்
''மாநிலத்தில் மின்சார திருட்டுகளை தடுக்க மாவட்ட, மின்சார வினியோக நிறுவன கண்காணிப்பாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. மின்சார திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று, மேல்சபையில் ம.ஜ.த., உறுப்பினர் சூரஜ் ரேவண்ணா கேள்விக்கு, மின்சார அமைச்சர் ஜார்ஜ் விளக்கம் கொடுத்தார்
''பெங்களூரு - கலபுரகி வழித்தடத்தில் தற்போது இயங்கும் விமான சேவையை தொடரவோ அல்லது உதான் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பிற விமான நிறுவனங்களை ஏலத்திற்கு அழைக்கவோ, மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது,'' என்று, மேல்சபையில் பா.ஜ., உறுப்பினர் திப்பண்ணா எழுப்பிய கேள்விக்கு, உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சர் எம்.பி.பாட்டீல் பதில் அளித்தார்
காலாவதியான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு வாரியாக இடஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் செயல்முறை நடந்து வருவதாக, மேல்சபையில் நகராட்சி நிர்வாக அமைச்சர் ரஹீம்கான் கூறினார்
''கர்நாடகாவில் 545 எஸ்.ஐ., பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பில் ஏற்பட்ட குழப்பத்தால், ஆள்சேர்ப்பு நடைமுறை பா.ஜ., ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் 947 எஸ்.ஐ., பணியிடம் நிரப்பப்பட்டு உள்ளது. ஷிவமொக்கா மாவட்டத்தில் காலியாக உள்ள 42 எஸ்.ஐ., பணியிடம் விரைவில் நிரப்பப்படும்,'' என்று, சட்டசபையில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அறிவித்தார்
''கர்நாடகாவில் வனவிலங்கு சரணாலயங்கள், தேசிய பூங்காக்களில் 6,395 யானைகள், 563 புலிகள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வெளியே வருவதை தடுக்கவும், புலிகள், யானைகளை அடையாளம் காணும் பணிகள் நடக்கின்றன. வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் 428 கி.மீ., துாரத்திற்கு இரும்பு கம்பி அமைக்கப்பட்டு உள்ளது,'' என்று, சட்டசபையில் வன அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறினார்
''விவசாயிகள் வழங்கும் கரும்புகளை எடை பார்க்கும் போது அதில் மோசடி செய்யும், சர்க்கரை ஆலைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய அரசு தயாராக உள்ளது. மாநிலத்தில் உள்ள 81 சர்க்கரை ஆலைகளில் 12 ஆலைகளில் டிஜிட்டல் எடை இயந்திரங்களை நிறுவ அரசு டெண்டர் கோரி உள்ளது,'' என்று, சர்க்கரை துறை அமைச்சர் சிவானந்தா பாட்டீல் சட்டசபையில் கூறினார்
கர்நாடக சட்டசபையில் வாடகை திருத்தம், தொழிலாளர் நல நிதி, சந்திரகுடி ரேணுகாம்பா பகுதி மேம்பாட்டு ஆணையம் உட்பட 12 மசோதாக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டு, அனைத்தும் நிறைவேற்றப்பட்டன
''காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், பிட்காயின் முறைகேடு, எம்.எல்.ஏ., முனிரத்னா, முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா மீதான பலாத்கார வழக்குகள், தர்மஸ்தலா வழக்கு உட்பட 32 வழக்குகளுக்கு எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. வழக்கு விசாரணை, வக்கீல்கள் சம்பளம் என 3.55 கோடி ரூபாய் செலவாகி உள்ளது,'' என்று, சட்டசபையில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறினார்.

