ரூ.8.69 கோடிக்கு சொத்து குவிப்பு கலால்துறை அதிகாரிக்கு சிக்கல்
ரூ.8.69 கோடிக்கு சொத்து குவிப்பு கலால்துறை அதிகாரிக்கு சிக்கல்
ADDED : மார் 15, 2026 06:26 AM

உடுப்பி: உடுப்பி மாவட்ட கலால் துறை துணை கமிஷனர், வருமானத்திற்கு அதிகமாக, 8.69 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பது, லோக் ஆயுக்தா சோதனையில் தெரியவந்துள்ளது.
உடுப்பி மாவட்ட கலால்துறை அலுவலகத்தில், துணை கமிஷனராக பணியாற்றுபவர் சீனிவாஸ். இவர், மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்க லஞ்சம் வாங்கி, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக, உடுப்பி லோக் ஆயுக்தா எஸ்.பி., தினேஷ் குமாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின்படி, நேற்று முன்தினம் உடுப்பி மற்றும் மங்களூரில் உள்ள சீனிவாஸ் வீடு, அவரது உறவினர்கள் வீடுகள் என, 15 இடங்களில் சோதனை நடந்தது. இச்சோதனையின் போது, சீனிவாஸ் வருமானத்திற்கு அதிகமாக 8.69 கோடி ரூபாய்க்கு, சொத்துக்கள் வாங்கியிருப்பதற்கான ஆவணங்கள் கிடைத்தன.
அதில், 6.90 கோடி ரூபாய்க்கு 11 நிலங்கள், வீடுகள், விவசாய நிலம் என அசையா சொத்துக்கள் வாங்கியுள்ளார். 1.47 கோடி ரூபாய்க்கு நகைகள் வாங்கியுள்ளார். 25.75 லட்சம் ரொக்கம் உட்பட 1.79 கோடி ரூபாய்க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
சோதனையின் போது சிக்கிய, நகை, பணம், சொத்து ஆவணங்களை லோக் ஆயுக்தா போலீசார் கைப்பற்றினர். சீனிவாஸ் மீது உடுப்பி லோக் ஆயுக்தா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளது. வரும் நாட்களில் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்புவர்.
லோக் ஆயுக்தா கொடுக்கும் அறிக்கை அடிப்படையில், சீனிவாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
