/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இளம் பெண் மீது தாக்கு ரவுடிகள் அட்டூழியம்
/
இளம் பெண் மீது தாக்கு ரவுடிகள் அட்டூழியம்
ADDED : மே 26, 2025 12:54 AM
கே.ஆர்.புரம் : சாலையில் ஹாரன் அடித்ததற்காக இளம்பெண்ணை ரவுடிகள் தாக்கி காயப்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது.
பெங்களூரில் குட்டி ரவுடிகள், பொது மக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் சம்பவங்கள், ஆங்காங்கே நடக்கின்றன. இது போன்ற சம்பவம் பெங்களூரில் நேற்று நடந்தது.
கே.ஆர்.புரத்தின், டின் பேக்டரி அருகில் நேற்று முன் தினம் இரவு, இளம்பெண் ஒருவர், தன் கணவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரவுடிகள் சிலர், சாலையில் குறுக்கும், நெடுக்குமாக பைக் ஓட்டியபடி சென்றனர். தம்பதி செல்ல வழிவிடாமல், தொல்லை கொடுத்தனர்.
பல முறை 'ஹாரன்' அடித்து, வழி விடும்படி தம்பதி கூறினர். இதனால் கோபமடைந்த அந்த கும்பல், பெண்ணையும், அவரது கணவரையும் கண்மூடித்தனமாக தாக்கியது. பெண்ணின் மூக்கில் ரத்தம் வடிந்தும், விடாமல் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியது. இந்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் பரவியது.
சாலையில் பெண்ணை தாக்கி, காயப்படுத்திய ரவுடிகளை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி, பலரும் வலியுறுத்துகின்றனர். தாக்குதலில் காயமடைந்துள்ள தம்பதி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ராமமூர்த்தி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசாரும் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, ரவுடிகளை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டு உள்ளனர்.