/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாழைக்குலைக்குள் கஞ்சா, சிகரெட் ஷிவமொக்கா சிறைக்குள் கடத்த முயற்சி
/
வாழைக்குலைக்குள் கஞ்சா, சிகரெட் ஷிவமொக்கா சிறைக்குள் கடத்த முயற்சி
வாழைக்குலைக்குள் கஞ்சா, சிகரெட் ஷிவமொக்கா சிறைக்குள் கடத்த முயற்சி
வாழைக்குலைக்குள் கஞ்சா, சிகரெட் ஷிவமொக்கா சிறைக்குள் கடத்த முயற்சி
ADDED : நவ 22, 2025 05:13 AM

ஷிவமொக்கா: வாழைக்குலைக்குள் கஞ்சா, சிகரெட்டுகளை மறைத்து வைத்து, ஷிவமொக்கா மத்திய சிறைக்குள் கடத்த முயன்றதை, போலீசார் கண்டுபிடித்தனர்.
பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை, மங்களூரு, மைசூரு சிறைகள் உட்பட மாநிலத்தின் பல்வேறு சிறைகள், கைதிகளுக்கு சொகுசு விடுதியாக மாறுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதை உறுதிப்படுத்துவது போன்ற சம்பவங்கள், சிறைகளில் அவ்வப்போது நடக்கின்றன.
கைதிகள் மது பார்ட்டி நடத்துவது, சிகரெட் புகைப்பது, மொபைல் போன் பயன்படுத்தும் வீடியோக்கள் வெளியாகின்றன.
ஷிவமொக்கா நகரின் சோகானே கிராமத்தில் மத்திய சிறை உள்ளது. இந்த சிறைக்கு நேற்று முன் தினம் மதியம், ஆட்டோவில் ஐந்து வாழைக்குலைகள் கொண்டு வரப்பட்டன. இது பற்றி சிறை பாதுகாப்பு போலீசார் விசாரித்தபோது, சிறை உணவகத்தினர் கேட்டதை அடுத்து, வாழைக்குலை கொண்டு வந்ததாக ஆட்டோ ஓட்டுநர் கூறினார்.
சந்தேகமடைந்த சிறை பாதுகாப்பு அதிகாரிகள், வாழைக்குலைகளை சோதனையிட்டனர். வாழைக்குலைகளின் நடுவில் உள்ள தண்டை வெட்டி, அதனுள் கஞ்சா மற்றும் சிகரெட்டுகளை வைத்து டேப் ஒட்டியிருந்ததை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர். 123 கிராம் கஞ்சாவும், 40 சிகரெட்டுகளும் இருந்தன.
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநரை விசாரித்தபோது, சிறை உணவகத்தினர் ஆர்டரின்படி, வாழைக்குலைகள் கொண்டு வந்ததாக கூறினார். அதற்குள் கஞ்சா, சிகரெட் இருப்பது தனக்கு தெரியாது என்றார்.
சிறையில் உள்ள கைதிகளுக்காக, கஞ்சா, சிகரெட் அனுப்பியுள்ளனர். இவற்றை அனுப்பியது யார் என, போலீசார் விசாரணை நடத்துகின்றனர். சிறை உணவக ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

