/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆழ்துளை கிணறு அமைக்க ஆணைய அனுமதி கட்டாயம்
/
ஆழ்துளை கிணறு அமைக்க ஆணைய அனுமதி கட்டாயம்
ADDED : மே 13, 2025 12:25 AM
பெங்களூரு : ஆழ்துளை கிணறு அமைக்க மாநில நிலத்தடி நீர் ஆணையத்தின் அனுமதி கட்டாயம் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சுவதால், கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவது குறித்து அரசு கவலை தெரிவித்துள்ளது.
இதற்கு தீர்வு காணவும், தேவையின்றி ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, ஜி.டி.கே.ஜி.ஏ., துணை இயக்குனர் அம்பிகா கூறியதாவது:
நிலத்தடி நீரை பயன்படுத்தும் கட்டடங்கள், வீடுகள், வர்த்தக மையங்கள், நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதுகுறித்து, ஜி.டி.கே.ஜி.ஏ., எனும் நிலத்தடி நீர் இயக்குனரகம் மற்றும் கர்நாடக நிலத்தடி நீர் ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது.
ஆழ்துளை கிணறு அமைக்க ஜி.டி.கே.ஜி.ஏ.,விடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை ஏற்கனவே அமலில் உள்ளது.
இந்த ஆணையம் 2019ல் அமைக்கப்பட்டது. அன்று முதல் இதுவரை, பெங்களூரில் 205 தொழிற்சாலைகள், குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் மட்டுமே, ஜி.டி.கே.ஜி.ஏ.,வின் தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளன.
இந்த விதிகள் குறித்து, மக்களுக்கு சரியாக தெரியாததால், ஜி.டி.கே.ஜி.ஏ.,விடம் அனுமதி பெறாமல் ஆழ்துளை கிணறுகள் அமைக்கின்றனர்.
வீட்டு உரிமையாளர்கள் ஆழ்துளை கிணறு அமைக்க குடிநீர் வடிகால் வாரியத்திடம் அனுமதி பெற்றால் போதும். ஆனால் பெரிய நிறுவனங்கள், ஜி.டி.கே.ஜி.ஏ.,விடம் அனுமதி பெறுவது கட்டாயம்.
பெங்களூரின் 20 சதவீதம் திட்டங்களுக்கு, எங்களிடம் அனுமதி பெறவில்லை. ஏன் என்றால் குடிநீர் வாரியம், எங்களை தொடர்பு கொள்ளாமல் ஆன்லைனில் அனுமதி அளிக்கிறது. திட்டங்கள் தொடர்பாக, எங்களுடன் தகவல் பகிர்ந்து கொள்ளும்படி குடிநீர் வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.