ADDED : மார் 23, 2026 01:40 AM

ராமமூர்த்திநகர்: பெங்களூரில் அதிகாலையில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு ராமமூர்த்திநகர் டி.சி.பாளையாவில் வசித்தவர் கிரண், 25. ரவுடியான இவர் மீது ராமமூர்த்திநகர், கே.ஆர்.புரம், ஹென்னுார் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருந்தன. ரவுடி தொழில் மட்டுமின்றி, கிரண் ஆட்டோவும் ஓட்டினார்.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ஆட்டோவில் வீட்டிற்கு சென்றார். இன்னொரு ஆட்டோவில் வந்த நான்கு பேர் கும்பல், கிரண் ஓட்டி சென்ற ஆட்டோவை மறித்தனர். ஆட்டோவில் இருந்து கிரணை வெளியே இழுத்து, கத்தி, அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
தலையில் பலத்த வெட்டு விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார். கொலையாளிகள் அங்கிருந்து தப்பினர். சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், ராமமூர்த்திநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கிரண் குற்றபின்னணி கொண்டவர் என்பதால், எதிர் கோஷ்டியை சேர்ந்த கும்பல் முன்விரோதத்தில் கொன்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். நேற்று முன்தினம் இரவும் சிலருடன், கிரண் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.
இதனால் அவர்களில் யாராவது கொலை செய்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும், போலீசார் ஆய்வு செய்கின்றனர்.
